

முல்லைப்பெரியாறு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் செவ்வாய்க்கிழமை கூறுகையில், “வழக்கறிஞர்களுடன் தீவிரமாக ஆலோசித்த பிறகு இம்மாத இறுதிக்குள் இந்த மனு தாக்கல் செய்யப்படும்” என்றார்.
அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தவேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-ம் தேதி அனுமதி அளித்தது. மேலும் அணை பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசின் சட்டம் செல்லாது எனவும் தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து நடைபெற்ற கேரள அனைத்துக் கட்சி கூட்டத்தில், இவ்வழக்கில் உரிய சட்ட வாய்ப்புகளை ஆராய்வதற்கு முதல்வர் உம்மன் சாண்டிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையி லான இடதுசாரி ஜனநாயக முன்ன ணியும் ஒத்தக்கருத்தை கொண்டுள் ளன. முல்லைப்பெரியாறு அணை யில் உடைப்பு ஏற்பட்டால், அது கேரளத்தில் 5 மாவட்ட மக்களை பாதிக்கும் என்று இக்கட்சிகள் கூறிவருகின்றன.