

கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று வதந்திகள் பரவிவரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று, "கரோனா தடுப்பூசியால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை. சிலர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஆண், பெண் என இருபாலருக்குமே மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்று தகவலைப் பரப்பப்புகின்றனர். ஆனால் இது உண்மையல்ல.
கரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க பாதுகாப்பானது. தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழு (NEGVAC) கரோனா தடுப்பூசியைப் பாலூட்டும் தாய்மார்கள் கூட போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது. தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னும் பாலூட்டுவதை நிறுத்தத் தேவையில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் முழுமையாக பரிசோதிக்கப்படுகிறது.
மேலும், தேசிய தடுப்பூசித் திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் மருத்துவர் என்.கே.அரோராவும் அண்மையில் ஒரு பேட்டியின்போது இது தொடர்பான ஐயப்பாடுகளை நீக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
இதுபோன்ற வதந்திகள் போலியோ தடுப்பூசி காலத்திலும் பகிரப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். அனைத்துத் தடுப்பூசிகளுமே தீவிர பரிசோதனைக்குப் பின்னரே மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகின்றன. அதனால் இதுபோன்ற பக்கவிளைவுகளுக்கு வாய்ப்பே இல்லை" என மத்திய அரசு நிபுனர்கள் கூற்றை மேற்கோள் காட்டி விளக்கமளித்திருக்கிறது.