Published : 30 Jun 2021 01:25 PM
Last Updated : 30 Jun 2021 01:25 PM

கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு: 6 வாரங்களுக்குள் வழிகாட்டுதல்கள்:  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஆறு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் ரீபக் கன்சால், கவுரவ் பன்சால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்தமனுவை நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டது. இதன்படி, மத்திய அரசு 183 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில் ‘‘கரோனாவால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் மாநில அரசுகளால் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது. பல்வேறு நோய்களால் உயிரிழப்பு ஏற்படும் நிலையில், இந்த நோயால் உயிரிழப்போருக்கு மட்டும் இழப்பீடு வழங்குவது சரியாக இருக்காது.

கரோனா தொற்று காரணமாக ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அனைத்து தரப்பைச்சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவியைசெய்ய மத்திய அரசு தயாராகஉள்ளது. ஆனால், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க முடியாது’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

கரோனாவால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம், கடமை மத்திய அரசுக்கு உள்ளது; கரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு வழங்குவது என்பது அரசின் விருப்பபடி அல்ல. சட்டப்படி கட்டாயமானது.

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உட்பட பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்குவது கட்டாயம்.

பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவு 12-ன் கீழ் பரிந்துரைகளை வழங்காததன் மூலம் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது கடமையை செய்ய தவறிவிட்டது.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஆறு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x