

ஆந்திராவில் மீனவருக்கு கிடைத்த சங்கு வடிவிலான மெகா நத்தை ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், உப்பாடா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது ஜெகன்நாதம் என்ற மீனவரின் வலையில் மீன்களுடன் சேர்ந்து பெரிய சங்கு ஒன்றும் சிக்கியது. இதனை கரைக்கு கொண்டு வந்து பார்த்ததில், அது சங்கு அல்ல; ஒரு மெகா நத்தை என்பது தெரியவந்தது. கடல்வாழ் நத்தையிலேயே இது மிக பெரிய நத்தை இனமாக கருதப்படுகிறது. இவை ‘சிரிங்ஸ் அரோனாஸ்’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இது 18 கிலோ வரை வளரும் தன்மையுடையது ஆகும்.
ஆரஞ்ச் நிறத்தில் காணப்படும் இந்த நத்தைகள் புயல், சூறாவளி காற்றுக்கு இடம்பெயரும் எனக் கூறப்படுகிறது. இதனை மீனவர் ஜெகன்நாதம் கரைக்கு கொண்டு வந்து அங்கேயே ஏலத்தில் விட்டார். இதனை ஜெகதீஷ் எனும் வியாபாரி ரூ. 18 ஆயிரத்திற்கு ஏலத்தில் எடுத்தார். இதுகுறித்து குண்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் லட்சுமண் குமார் கூறுகையில், “இந்த அரிய வகை நத்தையானது விலைமதிப்பு மிக்கதாகும். இதற்குள் முத்துக்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது" என்றார்.