

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இடையிலான உறவு வேறு அரசியல் வேறு என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, கடந்த ஜூன் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை உத்தவ் தாக்கரே முன்வைத்தார்.
ஆனால் இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியதால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. குறிப்பாக பாஜக, சிவசேனா இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் நேற்று கூறும்போது, “பிரதமர் மோடி, உத்தவ் தாக்கரே சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. இதன்மூலம் பாஜக, சிவசேனா இடையே மீண்டும் கூட்டணி ஏற்படும் என கருதக் கூடாது. தாக்கரே குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே தனிப்பட்ட முறையில் இன்னமும் நல்ல உறவு உள்ளது. அதேநேரம் அரசியல் என்பது தனி. எங்கள் பாதை வேறு” என்றார்.