

அயோத்தில் ராமர் கோயிலுக்காக நிலம் வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியினர் இதுதொடர்பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர் உள்ளிட்ட 9 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்பிற்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையானது கோயிலுக்கான நிலங்களை விலைக்கு வாங்கி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நன்கொடையில் வாங்கப்படும் இவற்றில் நிலப்பேர ஊழல் புகார் எழுந்தது.
கடந்த மார்ச் 18-ல் ரூ.2 கோடிவிற்கப்பட்ட நிலம் அடுத்தசில நிமிடங்களில் அறக்கட்டளையினரால் ரூ.18.5 கோடிக்கு வாங்கப்பட்டதாகப் புகார் கூறப்பட்டது. தொடர்ந்து அரசு சார்பில் குத்தகைக்கு அளிக்கப்பட்ட நஜூல் நிலம்,அயோத்தி மடத்தினரால் ரூ.30 லட்சத்திற்கு விற்கப்பட்டது. இதை அறக்கட்டளையினர் அடுத்த மாதம் ரூ.2.5 கோடி விலையில் வாங்கி இருந்தனர். இந்த புகார்களின் மீது உபியின் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதன் மாநிலங்களவை எம்.பியான சஞ்சய்சிங், அயோத்தி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அறக்கட்டளையின் செயலாளரான சம்பக் ராய், உறுப்பினர் அனில் குமார் மிஸ்ரா, அயோத்தி நகர பாஜக மேயரான ரிஷிகேஷ் உபாத்யா உள்ளிட்ட 9 பேர் மீது 11 பிரிவுகளில் புகார் அளித்துள்ளார்.
தனது புகாரில் சஞ்சய்சிங் குறிப்பிடுகையில், ‘கடந்த வருடம்பிப்ரவரி 5-ல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன் சார்பில் விலைக்குபெற்ற நிலத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில், அறக்கட்டளையினர் மற்றவர்களுடன் இணைந்து பல கோடி ரூபாய் நன்கொடையை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி உள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் சட்டப்பேரவைக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக தேர்தலில் ஒவ்வொரு முறையும் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை பாஜக கையில் எடுக்கும். இந்தமுறை அதை கையில் எடுக்கும் எதிர்க்கட்சியினர், பாஜகவிற்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றனர்.