Published : 29 Jun 2021 08:57 PM
Last Updated : 29 Jun 2021 08:57 PM

ட்விட்டர் இந்தியா மீது  போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி போலீஸின் சைபர் க்ரைம் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது. ட்விட்டர் இந்தியா மீது பாயும் 4வது வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை போக்ஸோ சட்டத்தின் கீழும், ஐடி சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது புகார் கொடுக்கப்பட்டது.
அதில், ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக குழந்தைகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சைபர் குற்றப் பிரிவின் உயரதிகாரி ஆணையத்தின் முன் ஆஜராகும்படியும் எச்சரித்துள்ளது.

ட்விட்டர் இந்தியா நிறுவனத் தலைவர் மனிஷ் மகேஸ்வரி மீது ஏற்கெனவே ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் இணையதளத்தில் லடாக், காஷ்மீர் ஆகியவற்றை இரண்டு தனி நாடுகளாக சித்தரித்து வெளியான புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாகவே அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்சாஹர் பகுதியைச் சேர்ந்த பஜ்ரங் தளம் கட்சி உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 505 (2) மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஐடி (திருத்த) சட்டம் பிரிவு 74 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டபாதுகாப்பு அந்தஸ்து விலகிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x