Last Updated : 29 Jun, 2021 05:47 PM

 

Published : 29 Jun 2021 05:47 PM
Last Updated : 29 Jun 2021 05:47 PM

'சைக்கிளில் பயணித்தால் நல்லது': பெட்ரோல் விலையுயர்வு குறித்த கேள்விக்கு மத்தியப் பிரதேச அமைச்சர் பதில்

சைக்கிளில் பயணம் செய்வது உடலுக்கும் நல்லது சுற்றுச்சூழலுக்கும் நல்லது என மத்தியப் பிரதேச அமைச்சர் பிரதுமான் சிங் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலையுயர்வு குறித்து மத்தியப் பிரதேச அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், காய்கறி மார்கெட் போன்ற அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளில் செல்வது நல்லது. அது உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு சுற்றுப்புறச் சூழல் தூய்மையையும் உறுதி செய்கிறது.

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் வரும் வருவாய் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்குத் தான் பயன்படுத்தப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை முக்கியமா அல்லது நாட்டின் சுகாதார சேவை சிறப்பாக இருத்தல் முக்கியமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அவரின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் 99.80 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல், லிட்டர் 98.81 ரூபாய், டீசல் லிட்டர் 89.18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல், லிட்டர் 104.90 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 96.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல், லிட்டர் 98.64 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.03 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் பல நகரங்களிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ கடந்துள்ளது

பெட்ரோல், டீசல் விலையுயர்வு குறித்து அண்மையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான், "காங்கிரஸ் தனது ஆட்சியின்போது பெறப்பட்ட பல கோடி மதிப்பிலான எண்ணெய் பத்திரங்கள் மீதான கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டது. ஆகையால், தற்போது பாஜக அரசு காங்கிரஸ் ஏற்படுத்திய கடனுக்கான வட்டியுடன் முதலையும் சேர்த்தே அடைத்து வருகிறது. இதுவே இன்றைய நிலைமைக்கு முக்கியக் காரணம்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச அமைச்சர் ஒருவர் பெட்ரோல், டீசல் விலையுயர்வைத் தவிர்க்க சைக்கிளில் பயணம் செய்யலாம் என யோசனை கூறியிருக்கிறார்.

இத்தகைய சூழலில் வரும் ஜூலை 7ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு நாடு தழுவிய போராட்டங்களை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x