

டெல்டா பிளஸ் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பஞ்சாபில் வரும் ஜூலை 10ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்துமாறு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் தற்போது, கரோனா வைரஸ் உருமாறி டெல்டா பிளஸ் வைரஸாக அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா, பாட்டியாலா ஆகிய மாவட்டங்களில் டெல்டா பிளஸ் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் அதிக அளவில் பரவும் தன்மை கொண்டுள்ளதாலும் அது நோய் எதிர்ப்பு மண்டலத்தையே சிதைத்து அதிக பாதிப்பு ஏற்படுத்தும் என்பதாலும் இந்த வகை தொற்றாளர்கள் பற்றிய விவரத்தை உடனடியாக தெரியப்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் இரண்டு பேருக்கு இந்த வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், வரும் ஜூலை 10ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முதல்வர் அமரீந்தர் சிங் அமல்படுத்தியிருக்கிறார்.
அதன்படி, ஜூலை 1 முதல் பார்கள், பப் உள்ளிட்ட கேளிக்கை இடங்கள் 50% பேருடன் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50% ஊழியர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும்.
அதேபோல், பல்கலைக்கழகங்களைத் திறக்கலாம், ஆனால் 50% ஆசிரியர்கள், ஊழியர்களும் அதேபோல் 50% மாணவர்களும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் கருப்புப் பூஞ்சைக்கு இதுவரை 51 பேர் பலியாகியிருக்கின்றனர். அண்டை மாநிலங்களான டெல்லி, ஹரியாணவை விட பஞ்சாப்பில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் குறைவு என்றால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.