

மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்த மறுத்து டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக, மத்திய விஸ்டா திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ''மத்திய விஸ்டா திட்டம் தொடர்ந்து நடப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதியளித்துள்ளது. ஆனால், இந்த மனு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுநல நோக்கோடு இல்லை.
இந்தக் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கலாம். ஒட்டுமொத்த மத்திய விஸ்டா திட்டமும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. நாடாளுமன்றம் முழுமையாக இங்கு நடக்க வேண்டும். பொதுமக்கள் இந்தத் திட்டத்தின் மீது மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்தக் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் முறையாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன்தான் செயல்படுகிறார்கள். பணியாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளிலும், கரோனா தடுப்பு நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்குத் தேவையான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால், இந்தத் திட்டத்தை நிறுத்தக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். மனுதாரரின் மனுவில் உண்மைத்தன்மை இல்லாததால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம்'' எனத் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரர்கள் ஆன்யா மல்ஹோத்ரா, சோஹைல் ஹாஷ்மி ஆகியோர் ஏன் குறிவைத்து செயல்படுகின்றனர்.
மத்திய விஸ்டா திட்டத்தை பற்றி மட்டுமே ஏன் கவனம் செலுத்துகின்றனர். டெல்லியின் வேறு எந்த பொதுத் திட்டமும் செயல்படவே இல்லையா? டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த ரூ.1 லட்சம் தான் உங்கள் பிரச்சினையென்றால் அந்த அபராதம் எங்களைப் பொறுத்தவரை குறைவானது என்றே கூறுவோம்.
மத்திய விஸ்டா திட்டத்தில் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது என்று நீதிபதிகள் கூறினர்.