

மும்பையில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுள்ள இச்சூழலில் இரண்டாம் அலை இறுதி நிலையில் உள்ளது. மூன்றாம் நிலை தொடர்பான எச்சரிக்கை தடுப்பில் அரசுகள் ஈடுபட்டுள்ளன. கரோனா பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் மத்திய அரசு, மருத்துவ நிபுணர்களும் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
"கரோனா பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான தகவலாகும். இதை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் இந்திய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ இல்லை" என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரண்தீப் குலேரியா விளக்கமாக கூறினார்.
எனினும் 3-வது அலை ஏற்பட்டதால் முன்கூட்டியே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுகள் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கரோனா 2-வது அலை அதிகமாக பாதிப்பை ஏற்படுத்திய மும்பை நகரில் குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் மும்பையில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி சார்பில் குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன் குறித்த செரோ ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மும்பையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஏற்கெனவே கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. ஒன்று முதல் 18 வயதுக்குள்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் கிடைத்த தகவலில், 51.18 சதவீதம் குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. இது கடந்த மார்ச் மாதம் ஆய்வு செய்தபோது 39.04 சதவீதமாக இருந்தது.
குழந்தைகளின் வயது வாரியாக ஆய்வு செய்யப்பட்டதில் 10 - 14 வயதுடையவர்களில் 53.43 சதவீதம் பேருக்கும், 1 - 4 வயதுடையவர்களில் 51.04 சதவீதம் பேருக்கும் கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளதும் உறுதியாகியுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.