Published : 28 Jun 2021 04:53 PM
Last Updated : 28 Jun 2021 04:53 PM

கரோனா; பொருளாதாரத்தை மீட்டெடுக்க 8 புதிய திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க 8 புதிய திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார். சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாதத் திட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டது. இதனையடுத்து பொருளாதாரம் மீண்டெழ பல்வேறு நிதியுதவி திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.

பின்னர் கரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கிய பிறகு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டன. தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. சொந்த ஊர் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர். இந்திய பொருளாதாரம் மெல்ல மீளத் தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் கரோனா இரண்டாவது அலை வீசி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து 2-வது அலைக்கு பின்னர் நிலைமை சீரடையத் தொடங்கியுள்ள நிலையில் பொருளாதாரத்தை மீண்டெடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மீண்டும் எடுத்து வருகிறது. பல்வேறு துறைகளில் பலருக்கும் வேலையிழப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முடங்கியுள்ளன.

இதனையடுத்து கரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளில் மீண்டெழுந்து வரும் பொருட்டு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

அனுராக் தாக்கூர் மற்றும் நிர்மலா சீதாராமன்

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அதிக நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளோம்.

கரோனா காரணமாக பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாதத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

8 பொருளாதார சீர்த்திருத்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதில் 4 திட்டங்கள் புதியவை. சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு கடன் உத்தரவாத திட்டத்தின்படி சுற்றுலா துறையைச் சார்ந்தவர்கள் தங்கள் கடனை செலுத்தவும் தொழிலை மீண்டும் தொடங்கவும் கடனுதவி வழங்கப்படும்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்கப்படும்.

மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும்.

அவசர கால கடன் வசதியாக தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலமும் தொழில்துறைக்கு கடனுதவி வழங்கப்படும்.

7.95 சதவீத வட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு இந்த கடன் வசதி அமலில் இருக்கும். பிற துறைகளுக்கான கடனுக்கு வட்டி 8.25 சதவீதமாக இருக்கும். மற்ற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரும் உடன் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x