Published : 28 Jun 2021 12:21 PM
Last Updated : 28 Jun 2021 12:21 PM

பவுடர் வடிவ 2-டிஜி கரோனா மருந்து:  வர்த்தக ரீதியில் விற்பனை

தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2-டிஜி மருந்து வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வருவதாக இருப்பதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கரோனா மருந்தை தயாரித்துள்ளது.

2டிஜி கரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இதன் மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும். கரோனாவிலிருந்து விடுபட முடியும்.

இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு, 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம், டிஆர்டிஓ ஆகியவை இணைந்து கிளினிக்கல் பரிசோதனையை கரோனா நோயாளிகளிடம் நடத்தினர்.

2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை இந்தியாவில் 6 மருத்துவமனைகளில் நடந்து வெற்றியாக அமைந்ததையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-வது கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை 2020 டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை 27 கோவிட் மருத்துவமனைகளில் உள்ள 220 கரோனா நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதிக்கப்பட்டது.

3-வது கிளினிக்கல் பரிசோதனையில் ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளித்துள்ளது.

இதையடுத்து, கடந்த 1-ம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது. தண்ணீர் கலந்து குடிக்கும் இந்த பவுடர் வடிவ மருந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2-டிஜி மருந்து வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வருவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இந்த மருந்தை கரோனா நோயாளிகள் வாங்கி பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த மருந்தை மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யவும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x