

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த னர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி ரத்து செய்தது. மேலும், ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது என்ற கடந்த 1992-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் மராத்தா இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. மத்திய அரசு இயற்றிய 102-வது அரசமைப்பு சட்டத் திருத்தத்தில் இது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் மத்திய அரசு மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும். மாநில அரசுகளுக்கு அந்த உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
ஆனால், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘மத்திய அரசு இயற்றிய 102-வது சட்டத் திருத்தம் 342(ஏ) பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட பிரிவினை சேர்க்க அல்லது நீக்குவதற்கு மத்திய அரசுக்கு மட்டுமன்றி மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே, முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மறு ஆய்வு மனுவை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, இன்று நீதிபதிகள் அறையில் (சேம்பர்) விசாரிக்கி்றது. இதற்கிடையில், நீதிபதிகள் சேம்பரில் மறு ஆய்வு மனுவை விசாரிப்பதற்குப் பதில், நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், மறு ஆய்வு மனு மீதான விசாரணை முடிவு வெளிவரும் வரை, முந்தைய தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசு சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவையும் நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தம், மாநில அரசுகளின் அதிகாரத்தை எந்த வகையிலும் பிடுங்கிக் கொள்ளவில்லை. இதில்கூட்டாட்சி தத்துவத்தை எந்த வகையிலும் மீறவில்லை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.