Published : 28 Jun 2021 03:12 AM
Last Updated : 28 Jun 2021 03:12 AM

ஆளில்லா விமானங்கள் மூலம் லஷ்கர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் சதி; ஜம்மு விமான நிலையத்தில் 2 குண்டு வெடிப்பு: 5 கிலோ எடையுள்ள வெடிபொருட்களுடன் தீவிரவாதி கைது

ஜம்மு விமான நிலையத்தில் 6 நிமிடங்களில் 2 குண்டுகள் வெடித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் 5 கிலோ வெடிபொருட்களுடன் தீவிரவாதி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலை ஆளில்லாத விமானங்கள் (ட்ரோன்)மூலம் லஷ்கர்- இ-தொய்பா,ஜெய்ஷ்- இ-முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்தியுள்ளதாக தெரிகிறது.

ஜம்மு விமான நிலைய வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் நேற்று அதிகாலை 1.37 மணிக்கு ஒரு குண்டு வெடித்தது. 6 நிமிட இடைவெளியில் 1.43 மணிக்கு அடுத்த குண்டு, அதே பகுதியின் திறந்தவெளிப் பகுதியில் வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானநிலையம் முழுவதும் விமானப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஜம்மு விமான நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நார்வால் பகுதியில், 5கிலோ வெடிமருந்துடன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

வெளிநபர்கள் உள்ளே வர முடியாத உயர் பாதுகாப்பு கொண்ட பகுதியில் வெடிகுண்டு வெடித்ததால் ஜம்மு பிராந்தியம் முழுவதும் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்ததும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் படை துணைத் தளபதி ஏர் மார்ஷர் எச்.எஸ்.அரோரா, ஏர் மார்ஷல் விக்ரம் சிங் ஆகியோருடன் பேசி விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா அல்லது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புகளின் தொடர்புகள் இருக்கலாம் என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறும்போது, “இந்த வகையான வெடிபொருட்களை லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x