

‘‘ஐ.நா. தீர்மானம் கொண்டு வந்தால், அதன் தலைமையின் கீழ் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் போரில் இந்தியா பங்கேற்கும்’’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
‘விஜய் திவஸ்’ தினத்தை முன்னிட்டு, போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ பகுதியில் நேற்று நடந்தது. வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் போரில் இந்தியா பங்கேற்குமா என்று கேட்கின்றனர். இதுதொடர்பாக ஐநா தீர்மானம் கொண்டு வந்தால் அதன் தலைமையின் கீழ் சர்வதேச நாடுகள் சேர்ந்த படையில் இந்தியாவும் பங்கேற்கும்.
தற்போதைக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக் கையில் இந்தியா இறங்க வில்லை. எனினும் புலனாய்வு தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து வருகிறோம்.
இவ்வாறு பாரிக்கர் கூறினார்.
உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில், சுமார் 20 இந்தியர்கள் சேர்ந்திருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள், காஷ்மீர், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இதில் அடங்குவர். மேலும், ஐ.எஸ். அமைப்பில் சேர சென்ற 4 இந்திய இளைஞர்களை ஐக்கிய அரபு அமீரகம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது.