

இந்திய மருந்து நிறுவனமான ஜைடஸ் கேடில்லாவின் தயாரித்து வரும் கரோனா தடுப்பூசியானது விரைவில் சந்தைக்கு வரும் என்றும். இந்தத் தடுப்பூசி பிரத்யேகமாக, 12-18 வயது வரையிலானோருக்கு வழங்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தடுப்பூசித் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
375 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில் மத்திய அரசு கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 93-94 கோடியாக உள்ளது. இவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி வழங்க மொத்த 186.6 கோடி டோஸ் தடுப்பு மருந்து தேவைப்படுகிறது. அனைத்து வயதினருமே தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் செல்போன் இல்லாதவர்கள், இணையவசதி வாய்ப்பில்லாதவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் தடுப்பூசி மையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 21ம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றாடம் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரம் இணையதளத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது. போலி தடுப்பூசி முகாம்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய முகாம்களை நடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கியிவர்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடத்தும் பணியை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளலாம்.
கரோனா வைரஸின் புதிய திரிபுகள் கவலை அளிக்கின்றன. நாடு இப்போதுதான் 2வது அலையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில், புதிய திரிபுகள் கவலை அளிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 5.6% பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், டெல்டா பிளஸ் பரவல் கவலைக்குரியது.
தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து 188 கோடி டோஸ் தடுப்பூசி மருந்துகளைப் பெற்று இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டுடன் தற்போது ரஷ்யாவின் காமாலேயே இன்ஸ்டிட்டியூட்டின் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவற்றுடன்ன் பயாலாஜிக்கல் இ நிறுவனத்தின் தடுப்பூசியும் விரைவில் பயன்பாட்டுக் கொண்டுவரப்படவுள்ளது. ஜைடஸ் கேடில்லா தயாரிக்கும் தடுப்பூசியானது 12 வயதிலிருந்து 18 வயதுடையோருக்கு செலுத்தத்தக்கதாக இருக்கும்.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.