Published : 27 Jun 2021 03:12 AM
Last Updated : 27 Jun 2021 03:12 AM

டெல்டா பிளஸ் வைரஸ் பரவலை தடுக்க வேண்டும்: தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

கரோனாவின் டெல்டா பிளஸ் வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கரோனாவின் டெல்டா வகை வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் கடந்த பிப்ரவரியில் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டு நாள்தோறும் 4 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. தற்போது கரோனா வைரஸ் பரவல் குறைந்து தினசரி 50,000 பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்த பின்னணியில் நேபாளத்தில் கண்டறியப்பட்ட கரோனாவின் டெல்டா பிளஸ் வைரஸ்இந்தியாவின் 8 மாநிலங்களைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், 8 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் மதுரை, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங் களில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதே போல ராஜஸ்தானின் பிகானீர், கர்நாடகாவின் மைசூரு, பஞ்சாபின் பாட்டியாலா, லூதியாணா, ஜம்மு-காஷ்மீரின் கத்ரா, ஹரியாணாவின் பரிதாபாத், குஜராத்தின் சூரத், ஆந்திராவின் திருப்பதி மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது.

வைரஸ் பரிசோதனை

எனவே குறிப்பிட்ட 8 மாநிலங்களும் கரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக கரோனா மரபணு பரிசோதனைகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

டெல்டா பிளஸ் வைரஸ் பரவும்இடங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து வைரஸ் பரவலை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் தெரி வித்துள்ளார்.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மூத்த அதிகாரி சுஜித் குமார் சிங் கூறும்போது, "கரோனாவின் புதிய வகை வைரஸை கண்டறிவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. மரபணு பரிசோதனைக்கு மட்டும் 12 நாட்கள் வரை ஆகிறது. டெல்டா வகை வைரஸை விட டெல்டா பிளஸ் வைரஸ் வீரியமானது என்று இப்போதைக்கு கூற முடியாது.இதுதொடர்பாக அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து வருகிறோம். அதில் கிடைக்கும் முடிவுகளை மக்களுக்குத் தெரியபடுத்துவோம்" என்று தெரிவித்தார்.

2-வது அலை முடியவில்லை

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா நேற்று கூறும்போது, ‘‘இந்தியாவில் 2-வது அலை இன்னும் முடியவில்லை. எனவே, மாவட்டங்கள் அளவில் கரோனா பரவலை கண்காணிக்க வேண்டும், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

நாட்டில் 75 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக தொற்று பரவல் உள்ளது. 92 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீததுக்குள் தொற்று பரவல் உள்ளது. கரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, சுத்தமாக இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றினால், 3-வது அலையை தவிர்க்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x