Published : 26 Jun 2021 09:57 PM
Last Updated : 26 Jun 2021 09:57 PM

தடுப்பூசி வழங்கலின் வேகம் திருப்தியளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

நாட்டில் தடுப்பூசி வழங்கலின் வேகம் திருப்தியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுவரை 5.6% மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் கரோனா நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக மூத்த அதிகாரிகளுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில், தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்த விரிவான விளக்கத்தை அதிகாரிகள் பிரதமருக்கு அளித்தனர். வயது வாரியாக வழங்கப்பட்டு வரும் தடுப்பு மருந்தின் எண்ணிக்கை குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பல்வேறு மாநிலங்களில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

வரும் காலங்களில் தடுப்புமருந்து விநியோகம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர்.

6 நாட்களில் 3.77 கோடி டோஸ்கள்:

கடந்த 6 நாட்களில் 3.77 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மலேசியா, சவுதி அரேபியா மற்றும் கனடாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட இது அதிகமாகும் என்றும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் 128 மாவட்டங்களில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதாகவும், 16 மாவட்டங்களில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வேகம் திருப்தியளிக்கிறது..

தடுப்பூசி வழங்கலின் வேகம் இவ்வாரத்தில் அதிகரித்துள்ளது குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், இதைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வது முக்கியம் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "தடுப்பூசி மக்களை சென்றடைவதற்காக புதுமையான முறைகளை ஆராய்ந்து செயல்படுத்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டும்.

எந்தவொரு பகுதியிலும் அதிகரித்து வரும் தொற்றுகளை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கிய ஆயுதமாக பரிசோதனைகள் இருப்பதால், மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி பரிசோதனைகள் குறைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

கோவின் தளம் குறித்து சர்வதேச அளவில் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் கோவின் தளம் மூலமாக இந்தியாவுக்கு கிடைத்துள்ள தொழில்நுட்ப நிபுணத்துவத்தைக் கொண்டு விருப்பமுள்ள அனைத்து நாடுகளுக்கும் உதவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இன்னொரு மைல்கல்:

கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தனது போரில் மற்றுமொரு முக்கிய சாதனையை இந்தியா இன்று படைத்துள்ளது. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 32 கோடிக்கும் (32,11,43,649) அதிகமான தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்திவுள்ளது.

ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 58.10 லட்சம் (58,10,378) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன

தமிழ்நாட்டில் மட்டும் 48,09,662 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 69,386 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 1,64,862 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x