

பெட்ரோல் விலை சதமடித்த நகரங்களின் பட்டியலில் கடைசியாக இணைந்திருக்கின்றன பிஹாரின் பாட்னா நகரும், கேரளாவின் திருவனந்தபுரமும்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.11க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.88.65க்கும் விற்கப்படுகிறது.
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.104. டீலர் விலை லிட்டருக்கு ரூ.96.16 என்றுள்ளது.
நிறைய நகரங்களில் பெட்ரோல் விலை சதமடித்துவிட்ட நிலையில், கடைசியாக மங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ எட்டியது. தற்போது பாட்னாவிலும், திருவனந்தபுரத்திலும் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100.09 க்கும், டீசல் ரூ.95.19க்கும் விற்கப்படுகிறது. பிஹார் மாநிலம் பாட்னாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.14க்கு விற்கப்படுகிறது. அங்கு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.99 ஆக உள்ளது.
வாட் எனப்படும் மதிப்புக் கூட்டப்படும் வரி விதிப்பின் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலையில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலும் விரைவில் சதம்..
தமிழகத் தலைநகர் சென்னையிலும் விரைவில் பெட்ரோல் விலை சதமடிக்கும் நிலையிலேயே உள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.19க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.96.63 என்று விற்கப்படுகிறது.
பெருநகரங்களில் பெட்ரோல், டீசல் விலை:
| நகரம் | பெட்ரோல் விலை | டீசல் விலை |
| டெல்லி | ரூ.98.11 | ரூ.88.65 |
| மும்பை | ரூ.104.22 | ரூ.96.16 |
| சென்னை | ரூ.99.19 | ரூ.93.23 |
| கொல்கத்தா | ரூ.97.97 | ரூ.91.50 |
| பெங்களூரு | ரூ.101.39 | ரூ.93.99 |
| ஹைதராபாத் | ரூ.101.96 | ரூ.96.63 |