Published : 26 Jun 2021 03:01 PM
Last Updated : 26 Jun 2021 03:01 PM

முதல் டோஸ் கோவாக்சின்; பூஸ்டர் டோஸ் கோவிஷீல்டு: பலன் தருமா? எய்ம்ஸ் தலைவர் சொல்வதென்ன?

இரண்டு டோஸ்களுக்கு இரு வெவ்வேறு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்ற சந்தேகத்துக்கு டெல்லி எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், பாரத் பயோ டெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அத்துடன் தனியார் மருத்துவமனைகளில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போடப்படும் கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளையே போட்டுக் கொள்கின்றனர்.

ஒருசில இடங்களில் முதல் டோஸ் கோவிஷீல்டும், அடுத்த டோஸ் கோவாக்சினும் போட்டுக் கொள்ளும் சம்பவங்கள் அறியாமையால் நடந்திருக்கின்றன.

ஆனால், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் தெரிந்தே இரண்டு டோஸ்களுக்கு வெவ்வேறு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதனை வேக்சின் காக்டெய்ல் எனக் கூறுகின்றனர். இதனால், எந்தவித பாதிப்பும் இல்லை மாறாக எதிர்ப்பணுக்கள் அதிகளவில் உருவாகின்றன என மேலைநாட்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதனால், அங்கு ஃபைஸர், மாடர்னா தடுப்பூசி டோஸ்கள் மாறிமாறி செலுத்தப்படுகின்றன.
இந்நிலையில், இந்தியாவிலும் கோவேக்சின், கோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கும் ஒவ்வொரு தடுப்பூசியைப் பயன்படுத்தினால் என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், முதல் டோஸுக்கு ஒரு தடுப்பு மருந்தையும், இரண்டாவதாக வழங்கும் பூஸ்டர் டோஸுக்கு இன்னொரு தடுப்பு மருந்தையும் சேர்த்து வழங்கினால் என்னவென்ற கேள்வி ஏற்கெனவே எழுந்துள்ளது. இதனால், பக்கவிளைவுகள் சற்று அதிகமாக இருப்பதாக சில ஆய்வுகளும், பக்க விளைவுகள் இருந்தாலும் கூட எதிர்ப்பணுக்களை சற்று அதிகமாக உருவாக்குவதாகவும் சில தரவுகள் கூறுகின்றன. ஆனால், இதை உறுதிப்படுத்த ஒன்றிரண்டு ஆய்வு முடிவுகள் நிறைய தரவுகள் வேண்டும்.

இன்னும் சில காலத்தில் இந்தியாவில் உள்நாட்டு தடுப்பூசிகளுடன் ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக் V, சைடஸ் காடில்லா என நிறைய தடுப்பு மருந்துகள் கிடைக்கும். ஆகையால் அந்த நேரத்தில் எந்த இரண்டு மருந்துகளை முதல், இரண்டாவது டோஸ்களுக்கு கலந்து கொடுக்கலாம் என்பதை ஆய்வு செய்ய நிறைய வாய்ப்பிருக்கும். இப்போதைக்கு, கோவாக்சின், கோவிஷீல்டு மாறிமாறி கொடுப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இருப்பினும் இதனை கொள்கை முடிவாக செயல்படுத்த நிறைய தரவுகள் தேவைப்படுகிறது. அரசாங்கமும் இதில் கவனம் செலுத்தி வருகிறது. இன்னும் ஒருசில மாதங்களில் இதுதொடர்பான முடிவை அரசு வெளியிடும்.

கடந்த மாதம் லான்செட் மருத்துவ இதழில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியானது. அதில், பிரிட்டனில் ஒரு பெண்ணுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும், அடுத்த டோஸ் ஃபைஸர் தடுப்பூசியும் சோதனை முறையில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு மிகமிக லேசான பக்கவிளைவுகளே ஏற்பட்டது உடனே தெரியவந்தது. எதிர்ப்பணுக்கள் பலம் குறித்து இன்னும் அப்பெண்மணி ஆய்வில் இருக்கிறார்.
ஸ்பெயினில் நடந்த ஆய்வும் இரண்டு வேக்சின்களை சேர்த்துக் கொடுப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கிறது.

டெல்டா பிளஸ் வைரஸை தடுப்பூசிகள் எதிர்கொள்ளுமா?

டெல்டா பிளஸ் திரிபு வைரஸ்களை இப்போது புழக்கத்திலிருக்கும் தடுப்பூசிகள் திறம்பட எதிர்கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்து வருவது தொடர்பாக அவர் கூறுகையில், "தடுப்பூசிக்கு எதிராக செயல்பட்டு டெல்டா பிளஸ் இம்யூன் எஸ்கேப் ஆகிறதா என்பது பற்றி ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், மக்கள் அதைப்பற்றியெல்லாம் கருதாமல் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது நலம். ஒருவேளை அதன்பின்னரும் உங்களை வைரஸ் தாக்கலாம். ஆனால் பெரும் பாதிப்பு இல்லாமல் நீங்கள் மீண்டு வருவீர்கள்" என்றார்.

மூன்றாவது அலை; எச்சரிக்கை தேவை:

மூன்றாவது அலை, இரண்டாவது அலை போல் கொடூரமாக இருக்குமா என்றெல்லாம் இப்போதே கணித்துக் கூற முடியாது. ஆனால், மூன்றாவது அலையை நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். கடந்த முறை போல் எவ்வித அலட்சியமும் கூடாது. சிறிய அளவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட அதை அக்கறையுடன் கண்காணித்து உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மகாராஷ்டிரா வரும் வாரங்களில் நிறைய தளர்வுகளை அறிவித்திருந்த நிலையில் தற்போது அங்கு டெல்டா பிளஸ் வைரஸ் அதிகமாகியிருப்பதால் அரசு சில கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளே நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும்.

இவ்வாறு ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x