

ஆந்திராவில் முதல் டெல்டா பிளஸ் தொற்று திருப்பதியில் கண்டறியப்பட்டு, குணமாக்கப்பட்டதாக ஆந்திர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஆள்ள நானி நேற்று உறுதிப்படுத்தினார்.
கரோனா 2-ம் அலை குறைய தொடங்கும் இந்த சமயத்தில், புதிதாக டெல்டா பிளஸ் தொற்று மெல்ல பரவி, நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதல் மரணம் நேற்று மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் முதல் டெல்டா தொற்று திருப்பதியில் பதிவாகியதாக நேற்று அமராவதியில் ஆந்திர மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் ஆள்ள நானி உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இது மாநிலத்தில் பரவிய முதல் டெல்டா தொற்றாகும். இதனால், அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தொடர்ந்து டெல்டா தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’’ என கூறினார். ஏற்கெனவே சீனா, அமெரிக்கா, ரஷ்யா, நேபாளம், போலந்து, சுவிட்சர்லாந்து, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 85 நாடுகளில் டெல்டா பிளஸ் தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிட தக்கது.