Last Updated : 24 Dec, 2015 03:14 PM

 

Published : 24 Dec 2015 03:14 PM
Last Updated : 24 Dec 2015 03:14 PM

இடதுசாரிகள் இனி சுயமாக சிந்திக்கக் கூடும்: அமர்த்தியா சென் நம்பிக்கை நேர்காணல்

பாதுகாப்பு என்பது மனித வாழ்க்கைப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும், தேசப் பாதுகாப்பு இதில் ஓர் அங்கமே என்று பொருளாதார நிபுணரும் நோபல் வென்றவருமான அமர்ததியா சென் கூறியுள்ளார்.

அமர்த்தியா சென்னின் சமீபத்திய புத்தகம் The Country of First Boys. இது, வளர்ச்சி, நீதி, கல்வி ஆகிய விஷயங்கள் முதல் நாட்காட்டிகள், ரவீந்திரநாத் தாகூர் என்று பலதரப்பட்ட தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும்.

'தி இந்து' ஆங்கிலம் நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலிலிருந்து...

உங்கள் புத்தகத்தில் மனித வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் தேசப் பாதுகாப்பு ஆகியவை பற்றிய பலதரப்பட்ட முன்னுரிமைகளை பேசியுள்ளீர்கள். தேசப் பாதுகாப்பு என்பதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு மனித வாழ்க்கைப் பாதுகாப்புக்கு அரசுகள் அதிகம் செலவிடுவதில்லை என்று உங்களுக்குத் தோன்றியதுண்டா?

இதில் 3 விஷயங்கள் உள்ளன. முதலில் பாதுகாப்பு என்பதில் மானுட பாதுகாப்பே தலையாய கவலை அல்லது கரிசனையாக இருக்க வேண்டும். எனவே நாம் பாதுகாப்பு என்று பேசினாலே அது மானுட பாதுகாப்பு விஷயமே. இதில் புற அச்சுறுத்தல்கள், வன்முறை என்பதிலிருந்தும் பாதுகாப்பு என்பது அடங்குவதால், தேசப் பாதுகாப்பு என்பது மானுட வாழ்க்கை பாதுகாப்பு என்பதன் ஒரு பகுதியே.

இரண்டாவதாக, தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் மனித வாழ்க்கைப் பாதுகாப்பு அமசங்களான கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு வலை ஆகியவற்றுக்கு ஆதாரங்கள் ஒதுக்கப்படுவதில்லை என்பது உண்மைதான். மேலும் அரசியல் சூழலில் சில வேளைகளில் மானுட பாதுகாப்பை ஊட்டி வளர்ப்பதற்கு பதிலாக தேசியப் பாதுகாப்பு அதற்கான தடுப்பாகவே அமைந்து விடுகிறது. ஆனாலும், தேசப் பாதுகாப்புக்கான பட்ஜெட்டை நாம் குறைத்தால், அதன் பிற உள்விளைவுகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. மானுட பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு இரண்டுக்கும் இடையே பகைமுரண் இருப்பதற்கான காரணம் எதுவுமில்லை என்றே தோன்றுகிறது.

3-வதாக, கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு வலை ஆகியவை இந்தியாவில் அதன் அடிக்கட்டமைப்பிலேயே புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இது நம் சமூகத்தின் அடிவேர் வரை ஊடுருவியுள்ள வர்க்க அமைப்பு குறித்த விஷயமாகும். எனவே தேசப்பாதுகாப்புக்கு செலவிடுவதை மட்டுமே குற்றம் கூற முடியாது.

பொருளாதார வளர்ச்சி என்பதிலிருந்து மனித வாழ்க்கைத் தரம் நோக்கி கவனம் மாற உங்கள் புத்தகம் உதவியது. தற்போது, ஒரு நாடு மேலும் வளர்ந்த சமுதாயத்தை நோக்கி முன்னேற மானுட வளர்ச்சி என்பதிலிருந்து சமூக நீதி என்பதற்கு இன்னொரு மாற்றம் தேவை என்பதற்கான நேரம் இது என்று கருதுகிறீர்களா?

மனித வளர்ச்சி குறியீடு என்பதை நாம் வந்தடையும் போது, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதங்களை விட அதிகம் நிலைமைகளை விளக்கும் ஒரு எளிதான குறியீடு நமக்குத் தேவை என்பதே கருத்து. 1990-ம் ஆண்டின் மனித வளர்ச்சி குறித்த முதல் அறிக்கையை நாம் பார்த்தோமானால், நிறைய சந்தர்பங்களில் நாம் நீதி என்ற கருத்தை எழுப்பினோம். அதாவது மானுட வளர்ச்சி ஒரு கட்டுக்கோப்பாக வளரும்போது நீதி என்பது அதன் ஒரு பெரிய அங்கமாகிவிடும்.

வளர்ச்சி என்ற சொல்லாடலே 'நலிவுற்றவர்கள்' என்று அடையாளப்படுத்தப்படுவோரிடையே ‘சுதந்திரமின்மையையும்’ அதிகாரமின்மையையும் ஏற்படுத்தி அவர்களை மேற்கத்திய மாதிரி தொழில்மயமாக்கத்திற்கும், சந்தை ஆதிக்க பொருளாதாரத்திற்கும் பலவந்தமாகச் செலுத்தி விடுவதாக வளர்ச்சிசார்ந்த பொருளாதாரவியலை கடுமையாக விமர்சனம் செய்யும் ஆர்துரோ எஸ்கோபார், மாஜித் ரெஹ்னெமா ஆகியோரது கருத்துகளுக்கு உங்கள் எதிர்வினை என்ன?

இத்தகைய வாதங்களை நான் பெரிய அளவில் சந்தேகிக்கிறேன். பொருளாதார நிபுணர் ஆடம் ஸ்மித் (இவரது வெல்த் ஆஃப் நேஷன்ஸ் என்ற நூல் 1776-ல் வெளிவந்தது), எப்போதும் மனித வாழ்க்கை, செல்வ விநியோகம், பணக்காரர், ஏழை முரண்பாடு, சரக்குகளின் திறமையான உற்பத்தியில் சந்தையின் பங்கு பற்றியும், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதில் அரசுகளின் பங்கையும் பற்றி அக்கறைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பாடம் இன்றும் பொருந்தக் கூடியதே. இதனை மேற்கத்திய மாதிரி என்று வர்ணிப்பது அதன் தரத்தை குறைமதிப்பீடு செய்வதாகும். சந்தைப் பொருளாதாரம் என்பது முழுதும் மேற்கு நாடுகளின் கண்டுபிடிப்பு அல்ல. எகிப்து, பாபிலோன் இடையே வாணிபம் நடந்துள்ளது. ஹராப்பா, மொகஞ்சதாரோவிலும் வாணிபம் குறித்த முத்திரைகளைக் காணலாம்.

ஆனால் அந்தக் காலத்தில் முதலாளித்துவம் இல்லையே...

இது உண்மைதான், ஆனால் முதலாளித்துவம் என்பது ஒரு விசித்திரமான சொல். ஏழைகளின் நலன்கள் சீரான முறையில் புறக்கணிக்கப்படும் விதம், இதனை நீங்கள் முதலாளித்துவம் என்று வர்ணித்தால், அதனை நானும் எதிர்ப்பவனாகவே இருப்பேன். ஆனால் ஆடம் ஸ்மித் இந்த விதத்தில் மூலதனப்பெருக்கத்துக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரானவரே. மூலதனத்தின் தனிஉடைமையை அவர் ஆதரிப்பவர் என்றாலும், பணக்காரர்கள் ஒன்று சேரும்போதெல்லாம், ஏழைகளை எப்படி மோசடி செய்வது என்ற சதியைத் தீட்டுவதாகவும் அவர் சிந்தித்துள்ளார். ஆனால் அவர் ‘முதலாளித்துவம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதில்லை. ஆனால் மூலதனத்தின் மிகுதியான ஆதிக்கத்தை ஆடம் ஸ்மித் எதிர்த்தே வந்துள்ளார். நானும் அவ்வழியில்தான் சிந்திக்கிறேன், கார்ல் மார்க்சும் அவ்வழியில்தான் சிந்தித்தார்.

நாம் நாலந்தா பல்கலைக் கழக விவகாரத்துக்கு திரும்புவோம். டாக்டர் கோபா சபர்வாலை துணை வேந்தராக நியமித்தது விமர்சனத்துக்குள்ளானது. அவருக்கு பவுத்த ஆய்வுகள் குறித்த பின்னணி கிடையாது என்றும் பல்கலைக்கழக அமைப்பில் குறைந்தது 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியிருக்க வேண்டிய தேவையுள்ள யு.ஜி.சி. விதிமுறையும் அவரது நியமனத்தில் பின்பற்றப்படவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனரே?

அவர் ஒரு நல்ல துணைவேந்தரே. இந்திய சாதி -அமைப்பை வைத்துப் பார்க்கும் போது சாதி விவகாரங்கள் தலைதூக்கியுள்ளது ஆச்சரியமளிக்கவில்லை... நாலாந்தா பல்கலைக் கழகம் பவுத்த பல்கலைக் கழகம் அல்ல. இது பழைய நாலாந்தாவும் அல்ல. எனவே துறவி ஒருவர்தான் பல்கலைக் கழகத்தை நடத்த வேண்டும் என்பதும் அல்ல.

தற்போது வேந்தராக சிங்கப்பூரைச் சேர்ந்த ஜார்ஜ் இயோ உள்ளார். அவரே கூட டாக்டர் சபர்வால் துணைவேந்தர் பதவிக்கு பொருத்தமானவரே என்று கூறியுள்ளார். எனவே சபர்வாலுக்கு எதிரான பிரச்சாரம் கட்டமைக்கப்பட்ட ஒன்றே.

உங்கள் புத்தகத்தில், ஏகாதிபத்தியம் குறித்த காலங்கடந்த, பழமையான புரிதலைக் கொண்டவர்கள் என்பதற்காகவும், 'அமெரிக்க ஏகாதிபத்தியம்' குறித்த விமர்சனங்களில் பீடித்துப்போயிருப்பதாகவும் இந்திய இடதுசாரிக் கட்சிகளை நக்கல் செய்துள்ளீர்கள். சுமார் 130 நாடுகளில் அமெரிக்கா 900 ராணுவ நிலைகளை அமைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லை என்றா கருதுகிறீர்கள்?

அமெரிக்காவின் ராணுவ தலையீடு, ஆக்ரமிப்புகள் குறித்து கவலை எழுப்புவது நியாயமே. ஆனால் அதைத் தவிர வேறு எதையுமே சிந்திக்காமல் இருப்பது தவறு. குறிப்பாக அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இடதுசாரிகள் நம் அரசை கடுமையாக விமர்சனம் செய்ததைப் பற்றியே நான் அப்போது யோசித்தேன்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று ஏதாவது இருக்கிறதா? சில வழிகளில் அது இருக்கிறது என்றே நானும் கருதுகிறேன், ஆனால் இந்திய ஏகாதிபத்தியமும் உள்ளது. சீன ஏகாதிபத்தியம் உள்ளது. சில பிரெஞ்ச், பிரிட்டன் ஏகாதிபத்தியங்களும் உள்ளன. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது என்பது உண்மையே. ஆனால் எப்போதும் ஒரே ஒரு ஏகாதிபத்தியம் பற்றியே இடதுசாரிகள் பேசிவருவதற்கே எனது எதிர்ப்பு. அவர்களால் சுயமாகச் சிந்திக்க முடியவில்லை.

தற்போது சீதாராம் யெச்சூரி தலைமைப் பொறுப்பில் உள்ளார். இனி அறிவார்த்தமான சிந்தனைப்போக்குகள் தோன்றும் என்று நம்புகிறேன். மானுடம், சமத்துவம், நீதி ஆகியவற்றை நான் ஆதரிக்கிறேன், அதே வேளையில் அறிவார்த்த சிந்தனையையும் ஆதரிக்கிறேன்.

தமிழில்:ஆர்.முத்துக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x