

நேற்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கம்:
புதிய கல்விக் கொள்கை
மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி:
அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்துறை சார்ந்த ஆலோசனைகளுக்குப் பின் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மத்திய பாடத்திட்டத்துக்கும், மாநில அரசுகளின் பாடத்திட்டத்திட்டுக்கும் சிறந்த ஒத்துழைப்பை அடுத்த ஆண்டு முதல் காண முடியும். மத்திய பாடத்திட்டத்திலும், மாநில பாடத்திட்டங்களிலும் வெவ்வேறு பாடத்திட்ட முறைகள் பின்பற்றப்படுவது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாடு
சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா:
ஆண்டுதோறும் இந்தியாவுக்கு 0.68 சதவீத வெளிநாட்டு பயணிகளே இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, ஈ-டூரிஸ்ட் விசா, 12 கருப்பொருள் அடிப்படையிலான சுற்றுலாத் திட்டங்களை அறிமுகம் செய்ய மாநில அரசுகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு மேற்கொண்டுள்ளது.
35,000 குழந்தைத் தொழிலாளர் மீட்பு
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:
தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதிவரை 35,148 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2014-15-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 957 ஆகும்.
40 விருதுகள் திருப்பியளிப்பு
கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா:
அண்மைக்கால நிகழ்வுகளைக் கண்டித்து 39 எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்துள்ளனர். ஒரு கலைஞர் தனது லலித் கலா அகாடமி விருதை திருப்பி அளித்துள்ளார். அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய சாகித்ய அகாடமி கோரிக்கை விடுத்துள்ளது.
சீன டயர் இறக்குமதி தொடரும்
வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்:
சீன டயர்களின் இறக்குமதி கடந்த மே-ஜூன் மாதத்தில்தான் அதிகரித்துள்ளது. எனவே, சீன டயர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் முடிவை உடனடியாக எடுக்க முடியாது. சீன டயர்கள் அதிக அளவு இறக்குமதி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முன்னிலை
வர்த்தகம் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்:
இந்தியாவில் தமிழகத்தில் அதிகபட்சமாக 36 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதைத்தொடர்ந்து தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் தலா 26 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் 204 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, 15 லட்சம் பேர் சிறப்பு பொருளாதார மண்டலங்களால் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 225 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்படாமல் உள்ளன.