Last Updated : 16 Dec, 2015 11:56 AM

 

Published : 16 Dec 2015 11:56 AM
Last Updated : 16 Dec 2015 11:56 AM

தூய்மை இந்தியா திட்டத்துக்கு 1.5 பில். டாலர்கள் கடனுதவி: உலக வங்கி ஒப்புதல்

பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்காக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் கிடைக்காமல் உலக அளவில் 2.4 பில்லியன் மக்கள் உள்ளனர் என்ற உலக வங்கியின் புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் 750 மில்லியன்களுக்கும் அதிகமானோர் இன்னமும் போதுமான சுகாதார வசதிகளின்றி உள்ளனர். இதில் 80% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள்.

அதாவது 500 மில்லியன்களுக்கும் அதிகமான கிராமப்புற மக்கள் இன்னமும் திறந்தவெளி கழிப்பிடங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

உலக வங்கி இந்திய இயக்குநர் ஒனோ ருல் இது பற்றி கூறும்போது, “இந்தியாவில் ஏற்படும் பத்து மரணங்களில் ஒரு மரணம் மோசமான சுகாதாரத்துடன் தொடர்புடையதே. ஆய்வுகள் தரவுகளின் படி குறைந்த வருவாய் குடும்பங்களே மோசமான சுகாதர விளைவுகளை அதிகம் சந்திக்கின்றனர்.

எனவே இந்த கடனுதவி அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்த வலு செய்யும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. இதனால் கிராமப்புற மக்களின் சுகாதார நிலை மேம்படும்.

அரசுகளின் நல்லெண்ண செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவது மற்றும் நடத்தை மாற்றங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் 2 முக்கியக் கூறுகளாகும்.

குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளது உலகவங்கி.

உலக வங்கி தெற்காசிய பகுதி துணைத் தலைவர் அனெட் டிக்சன் கூறும்போது, “லட்சிய தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியா அசாதாரணமான தலைமைத்துவத்தை நிரூபித்து வருகிறது. மக்களின் நடத்தை மாற்றம் மற்றும் கழிப்பறை கட்டுமானம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.

மேலும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் கழிப்பறையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களுக்காக உலக வங்கி மேலும் 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவியையும் வழங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x