டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் இல்லை: மூத்த மருத்துவ நிபுணர்

டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் இல்லை: மூத்த மருத்துவ நிபுணர்
Updated on
1 min read

டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் மூன்றாவது கரோனா அலையை ஏற்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மூத்த மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் அகர்வால் கூறும்போது, “எங்கள் நிறுவனம் மகாராஷ்டிராவில் சுமார் 3,500 பரிசோதனை மாதிரிகளை ஆய்வு செய்தது. இதில் சிலருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், இந்த சதவீதம் 1%க்கும் மிகக் குறைவு. எனவே டெல்டா பிளஸ் வைரஸ் மூன்றாம் அலையை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் இல்லை.

முதலில் நாம் மூன்றாம் அலையைப் பற்றிக் கவலைப்படுவதற்கு முன்னர் இரண்டாம் அலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எனவே தற்போதைய சூழலில் டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அச்சப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை” என்றார்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட, இரண்டாம் அலைக்குக் காரணமாக விளங்கிய டெல்டா அல்லது பி.1.617.2 வைரஸில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக புதிய டெல்டா பிளஸ் வேற்றுரு உருவானது.

டெல்டா பிளஸ் மரபணுவின் ஆரம்பம் ஐரோப்பாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்டா பிளஸ் இந்தியாவைத் தவிர இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, போலந்து, ஜப்பான், நேபாளம், சீனா, ரஷ்யா உள்ளிட்ட 9 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 21 பேர் டெல்டா பிளஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் ரத்னகிரியில் ஒன்பது பேரும், ஜல்கானில் ஏழு பேரும், மும்பையில் இருவரும், பால்கர், தானே, சிந்துதுர்க் மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில், பாலக்காடு, பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் குறைந்தது மூன்று பேர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் கடப்பிரப் பஞ்சாயத்துப் பகுதியைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன்.

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலைச் சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் கரோனா வைரஸின் புதிய டெல்டா பிளஸ் வேற்றுருவின் பாதிப்புக்கு உள்ளானார். கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்திருந்த அந்தப் பெண், வீட்டுத் தனிமையிலிருந்தே குணமடைந்தார்.

கர்நாடகத்தில் டெல்டா பிளஸ் வேற்றுருவால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் ஒருவர் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in