டிவி சேனல் விவாதங்களால் மறைக்கப்படும் உண்மைகள்: அருண் ஜேட்லி ஆதங்கம்

டிவி சேனல் விவாதங்களால் மறைக்கப்படும் உண்மைகள்: அருண் ஜேட்லி ஆதங்கம்
Updated on
1 min read

செய்தித் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களால் செய்தியின் உண்மை மறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் ஜேட்லி கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், செய்தியையும் கருத்தையும் பிரிக்கும் கோடு வலுவிழந்து விட்டதால் வாசகர்கள் உண்மையைத் தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி, செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, ‘2014-15-ல் இந்திய ஊடகம்’ என்ற பெயரில் ஆண்டறிக்கையை டெல்லியில் செவ்வாயன்று வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

"தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, இப்போது செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், இணையதளம் என ஊடகங்கள் பல்கிப் பெருகி உள்ளன. அதேநேரம், இவை ஒரே செய்தியை பல்வேறு கோணங்களில் வெளியிடுகின்றன. இவற்றில் எது உண்மையான செய்தி என்பதை படிப்பவர்களும், பார்ப்பவர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் செய்திகள் நேர்மையாகவும், தெளிவாகவும், எத்தகைய சார்பின்றியும் வெளிவந்தன. இதுபோல செய்தித்தாள்களில் வெளியாகும் தலையங்கத்தின் மூலம் கருத்துகள் வெளியாகி வந்தன. ஆனால் சமீப காலமாக செய்தியையும் கருத்தையும் பிரிக்கும் கோடு வலுவிழந்துள்ளன.

குறிப்பாக, ஒரு செய்தியை கருப்பொருளாகக் கொண்டு தொலைக்காட்சிகளில் உரத்த குரலில் காரசாரமான விவாதங்கள் நடைபெறுகின்றன. இதனால் உண்மை மறைக்கப்படுவதால், எந்தச் செய்தி உண்மை என்பதை வாசகர்களும், பார்ப்பவர்களும் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், உண்மையான செய்தியை தெளிவாக வெளியிட்டு பழைய நிலையை மீட்டெடுக்க அச்சு ஊடகங்கள் (செய்தித்தாள்கள்) முன்வர வேண்டும். கருத்து கலப்பில்லாத உண்மையான செய்தியை வெளியிடுவதற்கு அச்சு ஊடகங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.

இந்திய பத்திரிகைகள் பதிவாளர் (ஆர்என்ஐ) அலுவலக புள்ளிவிவரப்படி, கடந்த ஓராண்டில் பத்திரிகைகள் 8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளன. இதில் பெரும்பகுதி வட்டார பத்திரிகைகள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in