

இந்தியாவில் அசைவ உணவு உண்பவர்கள் குறைவு இதனால் பருவநிலைக்கு உகந்த வாழ்வியலை இந்தியர்கள் பின்பற்றுகின்றனர் என பாரீஸ் மாநாட்டில் மத்திய அரசு திங்களன்று ஓர் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில், "இந்தியாவில் 42% மக்கள் சைவ உணவுகளையே உண்கின்றனர். அவர்கள் மீன், இறைச்சி, முட்டை என எதையும் உண்பதில்லை என உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்தியர்கள் பருவநிலைக்கு உகந்த வாழ்வியலை பின்பற்றுகின்றனர் என்பது நிரூபணமாகியுள்ளது.
அதிக அளவில் இறைச்சியை உண்பதால் நிலத்துக்கும், நீர்நிலைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றமும் அதிகரிக்கிறது. இந்தியாவில் சராசரியாக அசைவ நுகர்தல் தலைக்கு 3.3 கிலோ என்ற அளவில் உள்ளது. சர்வதேச அளவுடன் ஒப்பிடும்போது இது 10-ல் ஒரு பங்கே ஆகும்.
அதேபோல் இந்தியர்கள் யோகா பயிற்சி மேற்கொள்கின்றனர். இது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல இயற்கையுடன் நம்மை தொடர்புபடுத்திக் கொள்வதற்கான பயிற்சி. ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.
இந்தியர்கள் வாழ்க்கை முறையானது உலக நலனுக்கான பார்வை செறிந்ததாகவே உள்ளது. தேவைக்கேற்ற பயன்பாடு, உணவுக்கு மரியாதை, உள்ளூர் உணவுகளையும், இயற்கை உணவுகளையும் புசிப்பது, பாரம்பரிய கட்டமைப்பு ஆகியன இந்தியர்கள் சூழல் நட்புடன் செயல்படுவதை பறைச்சாற்றுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை இந்திய அரசின் சார்பில் மாநாட்டில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தாக்கல் செய்ததும், யோகா பயில்வதால் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாக்க முடியும் என கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு அமைச்சர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.