

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.
முன்னாள் துணை பிரதமரான தேவிலாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியாணா முதல்வராக இருந்தபோது ஆசிரியர் தேர்வாணையத்தின் பல கோடி ஊழலில் சிக்கினார். இதில் தன் மூத்த மகன் அஜய்சிங் சவுதாலாவுடன் சேர்ந்து ஒம் பிரகாஷ் சவுதாலாவும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஓம் பிரகாஷ் சவுதாலா குடும்பத்தில் எழுந்த மனக்கசப்பால், கடந்த டிசம்பர் 2018-ல் அஜய்சிங் தம் இருமகன்களை முன்னிறுத்தி, ஜேஜேபி எனும் புதிய கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றார்.
பின்னர் பாஜகவுடன் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ளார். துஷ்யந்த் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.
கடந்த 2013-ல் சிறையில் அடைக்கப்பட்ட சவுதாலா, கடந்தாண்டு, மார்ச்சில் அவசர பரோலில் விடுவிக்கப்பட்டார். கரோனா பரவல் காலத்தில், அது இரு முறை நீட்டிக்கப்பட்டது. அவருக்கு மேலும், மூன்று மாத தண்டனையே பாக்கி உள்ளது.
கரோனா பரவல் காரணமாக சிறைகளில் நெரிசலை குறைக்க, டெல்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ஏழு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஐந்து மாதங்களே பாக்கி உள்ளவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர்.
தற்போது டெல்லி அரசின் புதிய உத்தரவால் அவர் எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படவுள்ளார்.