

லிபோசோமல் அம்ஃபோடெரிசின்- பி மருந்தின் 61,120 குப்பிகள் மாநிலங்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படடுள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தோருக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
கருப்பு பூஞ்சை நோய்க்கு, ‘அம்போடெரிசின்-பி’ மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இதனை மத்திய அரசே தற்போது மாநிலங்களுக்கு விநியோகித்து வருகிறது.
மாநிலங்களுக்குக் கூடுதலாக 61,120 அம்ஃபோடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
கருப்புப் பூஞ்சை என்று அழைக்கப்படும் மியூகோர்மைகாஸிஸ் நோயின் சிகிச்சையில் அளிக்கப்படும் லிபோசோமல் அம்ஃபோடெரிசின்- பி மருந்தின் 61,120 குப்பிகள் கூடுதலாக அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான மருந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இதுவரை சுமார் 7.9 லட்சம் குப்பிகள் நாடு முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.