ஊழல் குற்றச்சாட்டுகளைத் தகர்த்து ஜொலிப்பார் ஜேட்லி: பிரதமர் மோடி நம்பிக்கை

ஊழல் குற்றச்சாட்டுகளைத் தகர்த்து ஜொலிப்பார் ஜேட்லி: பிரதமர் மோடி நம்பிக்கை
Updated on
2 min read

டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு புகார் விவகாரத்தில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். எல்.கே. அத்வானி தனக்கு எதிரான ஹவாலா புகாரிலிருந்து விடுபட்டதைப் போலவே, முறைகேடு புகார்களிலிருந்து ஜேட்லி வெளியேவந்து வண்ண மயமாக ஜொலிப்பார் என மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி மேற்கண்டவாறு பேசினார். இதுதொடர்பாக கூட்டத்துக்குப் பிறகு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறிய தாவது: பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே உள்ளிட்டோரும் காங்கிரஸால் தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். கூட்டத்தில், அத்வானியை உதாரணமாகக் கூறி பேசினார் பிரதமர் மோடி. அத்வானி மீது ஹவாலா மோசடி குற்றம் சாட்டப்பட்டது. அதிலிருந்து வெளியே வந்து வண்ணமயமாக ஜொலித்தார் அத்வானி. காங்கிரஸின் உத்தி, பூமராங்காக மாறி அவர்களையே தாக்கியது. அதேபோன்றுதான் ஜேட்லி விவகாரத்தில் தற் போதும் நடக்கவுள்ளது. அரசுக்கு களங்கம் கற்பிக்க காங்கிரஸ் பிரச்சினைகளைக் கண்டுபிடிக் கிறது என மோடி தெரிவித்தார்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜேட்லி செயல்பட்ட 14 ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தன் மீது குற்றம்சாட்டிய டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள ஜேட்லி, ரூ.10 கோடி இழப்பீடும் கோரியுள்ளார்.

மாநிலங்களவையில் அமளி

ஜேட்லி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பின், காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா, பாஜக எம்.பி. ஜேட்லி மீது கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினையை எழுப்ப முயன்றார். அதற்கு அவை துணைத்தலைவர் குரியன் அனுமதி மறுத்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள், ஜேட்லி பதவி விலகக் கோரி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, “நீங்கள் இப்பிரச்சினையை எழுப்பக் கூடாது எனக் கூறவில்லை. அதற்குரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உறுப்பினர் மீதான குற்றச்சாட்டு குறித்து பிரச்சினை எழுப்ப அவைத் தலைவருக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் அளிக்க வேண்டும். அந்த உறுப்பினருக்கும் எழுத்துப்பூர்வ தகவலை அளிக்க வேண்டும்” என குரியன் அறிவுறுத்தினார்.

ஆயினும் பூஜ்ஜிய நேரத்தை நடத்தவிடாமல் தொடர்ந்து காங்கிரஸார் அமளியில் ஈடுபட் டனர். இதையடுத்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “பூஜ்ஜிய நேரம், கேள்வி நேரத்தை நடத்த காங்கிரஸ் விரும்பவில்லை எனில், சிறார் நீதிச் சட்ட திருத்த மசோதா குறித்து விவாதத்தை உடனடியாக நடத்தலாம். இந்த முக்கியமான மசோதா குறித்து ஒட்டுமொத்த தேசமும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது” என்றார்.

இதை ஏற்காத காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால், அவை உணவு இடைவேளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in