Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 05:50 AM

இதுவரை 70 சதவீத கடன் தொகை மீட்பு; விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.5,825 கோடி சொத்துகள் விற்பனை: எஸ்பிஐ வங்கிகள் கூட்டமைப்பு நடவடிக்கை

விஜய் மல்லையா

மும்பை

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு விற்றுள்ளது. இதன்மூலம் ரூ.5,825 கோடி வசூலாகியுள்ளது.

வங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சி ஆகியோருக்கு சொந்தமான ரூ.9,371 கோடி மதிப்புள்ள சொத்துகளை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் அமலாக்கத்துறை ஒப்படைத்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தவில்லை. அவர், ஐடிபிஐ வங்கிக்கு ரூ. 900 கோடி, எஸ்பிஐ தலைமையிலான 17 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்புக்கு ரூ.9,990 கோடி கடன் தொகையை செலுத்த வேண்டும். இந்தக் கடனை செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்து விசாரித்தனர்.

வங்கிகளிடம் இருந்து தனது சொந்த பொறுப்பில் விஜய் மல்லையா கடன் பெற்றுள்ளார். கிங் பிஷர் நிறுவனத்தின் பேரிலான கடனுக்கு யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவன பங்குகளை ஈடாககாட்டியிருந்தார். கிங் பிஷர் நிறுவனத்தை செயல்படுத்துவதற்காக கடன் பெறப்பட்டு, அவை பின்னர் வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. சொத்துகள் வாங்கவும், சொந்த உபயோகத்துக்கு சொகுசு விமானம் வாங்கவும் இந்த தொகையை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் நீரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோரும் வங்கிகளில் பெற்ற கடனைதிருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவர்கள் மூன்று பேரால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.22,585.83 கோடியாகும். இவர்களுக்கு சொந்தமான ரூ.18,170 கோடி மதிப்புள்ளசொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.12,500 கோடி மதிப்பிலான பங்குகள் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை பறிமுதல் செய்தசொத்துகளில் ரூ.969 கோடிமதிப்பிலான சொத்துகள் வெளிநாட்டில் உள்ளவையாகும்.

இந்த மூன்று பேரும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு மோசடி மூலம் சொத்துகளை சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான பெயர்களில் நிறுவனங்களை உருவாக்கி வங்கியில் பெற்ற கடன் மூலம் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் போலியான நபர்கள், அறக்கட்டளைகள், மூன்றாம் நபர்கள் பெயரில் வாங்கிஅனுபவித்து வந்தது போதியஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீரவ் மோடியும் லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அமலாக்கத் துறை கைப்பற்றியிருந்த விஜய் மல்லையாவின் பங்குகளை வங்கிகள் கூட்டமைப்பிடம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அந்தபங்குகள் அனைத்தும் வங்கிகள் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது அந்த பங்குகள் விற்பனை மூலம் ரூ.5,825 கோடி கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு யுனைடெட் ப்ரூவரீஸ் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.1,367 கோடி மதிப்பிலான பங்குகளை வங்கிகள் கூட்டமைப்பு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் மல்லையா பல்வேறு பினாமி பெயர்களில் யுனைடெட் ப்ரூவரீஸ் (யுபி) பங்குகளை வைத்திருந்தார். இவற்றை வங்கிகள் கூட்டமைப்பு ஹெனிகென் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது.

இதுதவிர ரூ.800 கோடி மதிப்பிலான பங்கு விற்பனை இம்மாதம் 25-ம் தேதிக்குள் முடிவடையும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கொடுத்தகடனில் 70 சதவீத தொகை மீண்டுள்ளது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ள சொத்துகளில் இதுவரை ரூ.9,371 கோடி மதிப்புள்ள சொத்துகள், அவர்களுக்கு கடன்அளித்த வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகளை வங்கிகள் விற்பனை செய்யலாம் என அந்நியச் செலாவணி சட்ட நீதிமன்றம் (பிஎம்எல்ஏ) அனுமதி அளித்திருந்தது. இதன்படி, சில ரியல் எஸ்டேட் சொத்துகள் மற்றும்பத்திரங்களை விற்பனை செய்துநிதி திரட்டலாம் என்றும் கடனுக்குஈடாக வங்கிகளில் வைத்துள்ளசொத்துகளை விற்பனை செய்யலாம் என்றும் நீதிமன்றம் அந்த அனுமதியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x