

தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஏன் பணி நீக்கம் செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு வந்த இந்திய விமானப் படையின் உத்தரவை எதிர்த்து விமானப் படை வீரர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
விமானப் படையின் ஜாம்நகர் பிரிவில் அதிகாரியாக யோகேந்தர் குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கமாண்டிங் அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு எனக்கு விமானப் படையிடமிருந்து உத்தரவு வந்தது. ஆனால் இந்த ஊசியைப் போட்டுக் கொள்வதில் எனக்கு தயக்கம் உள்ளது.
தடுப்பூசியால் மரணங்கள் விளைவதாக வந்த செய்தியை அடுத்து எனக்கு பயம் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந் துரைத்த மருந்துகளை நான் பயன்படுத்தி வருகிறேன். மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றையும் நான் செய்து வருகிறேன்.
இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் என்னை ஏன் பணிநீக்கம் செய்யக் கூடாது என்று கேட்டு விமானப் படையிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் பணி நீக்கம் செய்வது என்பது சட்டவிரோதம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் அவரது விளக்கத்தை விமானப் படை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து விமானப் படையின் உத்தரவை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில், யோகேந்தர் குமார் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.ஜே.தேசாய், ஏ.பி. தாக்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
வாத, பிரதிவாதங்களுக்குப் பிறகு இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இந்திய விமானப் படை, மத்திய அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வரும் ஜூலை 1-ம் தேதி வரை யோகேந்தர் குமார் மீது பணி நீக்கம் உட்பட எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று விமானப் படை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.