இணையதளம், செல்போன் வசதி இல்லாவிட்டாலும் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்: மத்திய அரசு அறிவிப்பு

இணையதளம், செல்போன் வசதி இல்லாவிட்டாலும் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்: மத்திய அரசு அறிவிப்பு
Updated on
1 min read

இணையதளம், செல்போன் வசதி இல்லாவிட்டாலும் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி போடுவதில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள விளிம்பு நிலை மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மொபைல் போன், ஆதார் அட்டை அவசியம், கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் போன்ற கெடுபிடிகளால் அவர்களால் தடுப்பூசி போட இயலவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சில ஊடகச் செய்திகளில் இது திட்டமிட்ட புறக்கணிப்பு என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், இந்தப் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றது என மத்திய சுகாதார அமைச்சகம் புறந்தள்ளியுள்ளது.

டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி, ஜூலை 1 முதல் அன்றாடம் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி என்று களமிறங்கியுள்ள மத்திய அரசு அந்த இலக்கை எட்ட விளிம்புநிலை மக்களின் சவுகரியத்துக்ககாவும் சில சலுகைகள் இருப்பதாகவும் மத்திய அரசு விளக்கியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆங்கிலம் தெரியாதவர்களின் வசதிக்காகவே கோவின் இணையதளத்தில் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, வங்க மொழி, அசாமீஸ், குருமுகி, என பிராந்திய மொழிகளின் சேவையும் உள்ளது.

ஆதேபோல் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு என 9 வகையான அடையாள அட்டைகளைக் கொண்டு வர அறிவுறுத்தியிருந்தாலும், ஒருவேளை விளிம்புநிலையில் உள்ள ஒரு பயனாளியிடம் இதில் ஏதும் இல்லையென்றாலும் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். வாக் இன் முறையில் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதாவது தடுப்பூசி மையத்துக்குச் சென்று அங்குள்ள ஊழியர்கள் உதவியுடன் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

80% தடுப்பூசி இப்படித்தான் ஆன் சைட் பதிவு முறையின்படி வழங்கப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி செலுத்த வருவோர் செல்போன் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இத்தகைய தளர்வுகளால் இதுவரை 2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

அதேபோல் குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களால் மாறுத்திறனாளிகள் வயதானவர்கள் பயன்பெறுகின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தடுப்பூசி திட்டம் பழங்குடியின மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களில் 75% மையங்கள் கிராமப்புறங்களிலேயே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in