பிரதமர் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்: டெல்லி புறப்பட்டனர் காஷ்மீர் தலைவர்கள்

பிரதமர் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்: டெல்லி புறப்பட்டனர் காஷ்மீர் தலைவர்கள்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நாளை ஜூன் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரய்னா உள்ளிட்டோர் டெல்லி புறப்பட்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

அந்த முடிவுக்கு முன்னதாகவே மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பின.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் என ஆறு கட்சிகள் உள்ளடக்கிய குப்கர் பிரகடனம் வெளியிடப்பட்டு கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த அணி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தின. அதன் விளைவாக கைது செய்யப்பட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நாளை, ஜூன் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக பின்னர் தகவல் வெளியானது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பது என அம்மாநிலத்தின் 6 கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரய்னா உள்ளிட்டோர் இன்று டெல்லி புறப்பட்டனர்.

கடந்த ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட பின்னர் மத்திய அரசு காஷ்மீர் தலைவர்களுடன் நடத்தும் முதல் அரசியல் கூட்டமென்பதால் இக்கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், மெஹபூபா முஃப்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மத்திய அரசு தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in