Published : 23 Jun 2021 09:39 AM
Last Updated : 23 Jun 2021 09:39 AM

இந்தியாவில் கவலையளிக்கும் டெல்டா பிளஸ் வைரஸ்: கரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கவலையளிக்கக்கூடிய கோவிட்-19-ன் டெல்டா பிளஸ் வைரஸ் மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கரோனா 2-வது அலையின் போது டெல்டா வகை வைரஸ் வேக மாக பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது.

எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களையும் புதிய வைரஸ் எளிதில் தொற்றக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டால் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்பு களை மீண்டும் சந்திக்க நேரிடும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் அறிவுறுத்திஉள்ளனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் கரோனா வைரஸ் மரபணு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், புதிய வகை வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் எந்தஅளவுக்கு பலன் அளிக்கிறது, மோனோகுளோனல் ஆன்டிபாடிசிகிச்சை பலன் அளிக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து இப்போதே மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகளும் தெரித்துள்ளனர்.

இந்தநிலையில் 28 ஆய்வகங்களின் கூட்டமைப்பான இன்சாகோக்கின் சமீபத்திய கண்டறிதல்களை தொடர்ந்து, கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக இந்த மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதிகமாக பரவக்கூடிய தன்மை, நுரையீரல் செல்களின் ரிசப்டார்களுடன் வலுவாக ஒட்டக் கூடிய தன்மை மற்றும் பிற பொருள் எதிரிகளின் எதிர்வினையை குறைக்கும் தன்மையை இந்த கொரோனா வைரஸ் வகை கொண்டுள்ளதாக இன்சாகோக் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பொது சுகாதார எதிர்வினை நடவடிக்கைகளில் இன்னும் கவனம் செலுத்துமாறு மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்சாகோக்கால் அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேற்கண்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்குமாறும் பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறும் 3 மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

தேவையான பரிசோதனைகளை செய்து மேலும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் போதுமான அளவு மாதிரிகளை இன்சாகோக் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு முறையாக அனுப்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x