

டெல்லியில் ஆம் ஆத்மி நிர்வாகி மர்ம நபர்களால் கொடூரக் கொலை செய்யப்பட்டார். முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில உடல் அவரது வீட்டருகே கண்டெடுக்கப்பட்டது.
டெல்லி புறநகர் பகுதியான பேகம்பூரின் புர்வாஞ்சல் பகுதியை சேர்ந்தவர் திரேந்திர ஈஸ்வர் தனது மனைவி ராக்கி மற்றும் மகள் ஸ்ருதியுடன் வாழ்ந்து வந்தார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவர் புர்வாஞ்சல் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிறு மாலை, மேற்கு டெல்லியின் நங்லோயில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் அவரது கட்சியைச் சேர்ந்த நண்பருடன் சென்ற ஈஸ்வர் வீடு அன்று வீடு திரும்பவில்லை. மாலை புறப்பட்ட அவர் மணிக்கு இரவு 7.30 மணியளவில் தனது மனைவியிடம் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வீடு திரும்புவதாகவும் மனைவியிடம் தெரிவித்தார். ஆனால் மறு நாள் காலை வரை அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஈஸ்வரின் உடல் பயங்கர கத்திக்குத்துடன் உடல் பாகங்கள் முற்றிலுமாக சிதைக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டருகே காணப்பட்டது.
ஈஸ்வரின் தலை மற்றும் அந்தரங்க பாகங்கள் கொய்யப்ப்பட்டு உடல் அவரது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த புதற் அருகே உடல் கண்டெடுக்கப்பட்டதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெட்டப்பட்ட பாகங்கள் இதுவரை கண்டெடுக்கப்படாத நிலையில், இது முன் விரோதத்தின் காரணமாக நேர்ந்த கொலையாக இருக்கலாம் என்று மூத்த போலீஸ் அதிகாரி கூறினார். ஈஸ்வரின் கொலை குறித்து இது வரை எந்த முன்னேற்ற தகவலும் இல்லாமல் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், உறவுச் சிக்கல் பின்னணி கொண்ட பழிவாங்கல் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும் இது குறித்து எந்த முடிவுக்கு தற்போதைய சூழலில் வர முடியாது என்று போலீஸ் வட்டாரம் கூறிகிறது.
இதனிடையே, தனது கணவருக்கு அதுபோன்ற உறவு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் இல்லை என்று ஈஸ்வரின் மனைவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தனது கணவரின் செல்ஃபோனில் சிலரது ஊழல் தொடர்பான வீடியோ பதிவுகள் இருந்ததாகவும் அவரது உடல் இருந்த இடத்தில் செல்ஃபோன் சிக்காதது கொலை நோக்கத்துடன் தொடர்பு இருக்கும் விதத்தில் தனக்கு தோன்றுவதாகவும் கூறியுள்ள அவர், போலீஸார் அந்த கோணத்தில் விசாரணையை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈஸ்வர் சமீபத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் டெல்லி மாநகராட்சி பொறியாளர் மீது வழக்கு பதிவி செய்திருந்தார் என்றும் அவரது மனைவி ராக்கி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.