Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

சிறப்பு சீர்திருத்த நடவடிக்கைகளால் 23 மாநிலங்களுக்கு ரூ.1.06 லட்சம் கோடி நிதி: பிரதமர் நரேந்திர மோடி தகவல்

புதுடெல்லி

சிறப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் 23 மாநிலங்கள் ரூ.1.06 லட்சம் கோடியை கூடுதலாகப் பெற்றுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வழக்கமான சீர்திருத்தம் மற்றும் ஊக்க சலுகை என்ற தலைப்பில் அவர்வெளியிட்ட கருத்தில், 23 மாநிலங்கள் ரூ.2.14 லட்சம் கோடி பெற தகுதி பெற்றிருந்தன. இவை மத்திய அரசிடமிருந்து கூடுதலாக ரூ.1.06 லட்சம் கோடியைப் பெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய, மாநில அரசுகளிடையிலான உறவு மேம்பட்டுள்ளதன் வெளிப்பாடுதான் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆத்மநிர்பாரத் எனப்படும் சுயசார்புபொருளாதார திட்டத்தின் அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை விட கூடுதலாக 2 சதவீதம் பெற அனுமதிக்கப்படும். அதில் ஒரு சதவீத தொகையானது மத்திய அரசு செயல்படுத்தும் சில பொருளாதார சீர்திருத்தங்களை கட்டாயம் மேற்கொள்வதற்காகும்.

இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதும் அவர்கள்நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்வதற்குமானதாகும். நிதி ஸ்திரத்தன்மை இதில் இரண்டாவது அம்சமாகும். ஒவ்வொரு சீர்திருத்த நடவடிக்கைக்கும் கால் சதவீதம் ஊக்க தொகை வழங்கப்படும்.

மத்திய அரசு கொண்டு வந்த முதலாவது நடவடிக்கை, ‘ஒரு தேசம், ஒரு ரேஷன்’ கார்டு என்பதாகும். அனைத்துரேஷன் அட்டைகளும் ஆதார் அட்டையுடன் இணைத்து, ரேஷன் கடைகள் அனைத்தும் மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ் நாட்டின் எந்த பகுதியிலும் ரேஷன் பொருளை வாங்கிக் கொள்ளலாம். அடுத்தது, மாநிலங்களில் தொழில் தொடங்க ஏதுவான சூழலை உருவாக்குவது. இதற்கேற்ப மாநில அரசுகள் லைசென்ஸ் வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டும். 7 நடைமுறைகள் தானியங்கி முறையில் நிறைவேற்றக்கூடியதாக இருக்க வேண்டும். வெறுமனே கட்டணத்தை செலுத்தி அனுமதி பெறக்கூடியதாக எவ்வித இடையூறும் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்பதாகும்.

மூன்றாவதாக, மாநில அரசுகள்சொத்து வரி மற்றும் கழிவுநீரகற்றுகட்டணத்தை ஒரே சீராக்குவதாகும். முத்திரைத்தாள் கட்டணத்தை குறைப்பது போன்றவையும் இதில் அடங்கும்.நான்காவது சீர்திருத்தம், மின்கட்டண மானியத்தை பயனீட்டாளர்களின்வங்கிக் கணக்குக்கு நேரடியாக மாற்றுவதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x