

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் நிறைய உள்ளதாக சிவ சேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.
சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய வியாபாரிகள் பேரவையில் பேசுகையில், "மக்களவைத் தேர்தலில் கண்ட வெற்றியை, மகாராஷ்டிர தேர்தலிலும் காண முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே நாம் டெல்லியை அடைந்துவிட்டோம். தற்போது இங்கு நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.
நாட்டின் 21% தொழில்துறை உற்பத்தி இங்கிருந்து தான் கிடைக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் 40% வருவாய் வரியும் இங்கிருந்து தான் மத்திய அரசுக்கு சென்றடைகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மகாராஷ்டிர மாநிலம் பல விஷயங்களில் பின் தங்கி உள்ளது. மின் பற்றாக்குறை இங்கு அதிக அளவில் உள்ளது.
மாநிலத்தின் மத்திய பகுதியில் உபயோகிக்கப்படாத சுமார் 225 ஏக்கர் நிலம் வீணாக உள்ளது. இந்த நிலத்தில் நவீன சென்ட்ரல் பார்க்கையே நம்மால் உருவாக்க முடியும். மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வளர்ச்சி என்பது அவர்களை உள்ளடக்கியது தான்" என்றார்.