நாரதா வழக்கு: மம்தா மேல்முறையீட்டில் இருந்து விடுவித்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி

நாரதா வழக்கு: மம்தா மேல்முறையீட்டில் இருந்து விடுவித்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி
Updated on
2 min read

நாரதா வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் பணியில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ், தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார்.

மேற்கு வங்கத்தில் நாரதா இணையதளம் 2016 ஆம் ஆண்டு ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்தக் காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் ஹக்கிம், சுப்ரஜா முகர்ஜி உள்ளிட்ட 4 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் தனகரிடம் அனுமதி கோரியது. அதற்கு ஆளுநரும் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன்மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மேற்கு வங்க அமைச்சர்கள், எம்எல்ஏ கைது செய்யப்பட்டதை அறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, சட்ட அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சிபிஐ அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா செய்தனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்களும் திரண்டு சிபிஐ அலுவலகத்தை நோக்கி போராட்டம் நடத்தி, கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ஜாமீனைத் திரும்பப் பெற்றனர். அதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி, தங்கள் மீது சிபிஐ அதிகாரிகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். எனினும் மனுவை உடனடியாக விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மம்தா மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. எனினும் அந்த மனுவை விசாரிக்கும் பணியில் இருந்து நீதிபதி அனிருத்தா போஸ் தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார். இதையடுத்து வேறொரு நீதிபதிகள் அமர்வுக்கு அந்த மனு மாற்றப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ் முன்னதாகக் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in