அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முயற்சியா?- மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முயற்சியா?- மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
Updated on
2 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டு வதற்கு கற்கள் குவிக்கப்பட்டது குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டன. அதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின் போது, “அயோத் தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டுவந்து குவிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு மத ரீதியாக பாஜக செயல்படுகிறது” என்று ஐக்கிய ஜனதா தள எம்.பி கே.சி.தியாகி பிரச்சினை எழுப்பினார்.

அவர் மேலும் கூறும்போது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு 2 லாரிகளில் கற்கள் வந்துள்ளதாகவும், கோயில் கட்ட மோடி அரசின் சிக்னல் வந்துவிட்ட தாகவும் சாது நிருத்திய கோபால் தாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தியாகி வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்களும் மத்திய அரசைக் கண்டித்து அமளி யில் ஈடுபட்டனர். இதனால் அவை யில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதில் அளிக்கும்போது, “அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் கோயில் கட்டுவதற்கான தூண்கள் செய்யும் பணி கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. அங்கு தான் கற்கள் எடுத்து செல்லப் படுகின்றன. மேலும், தூண்கள் உரு வாக்குவதற்கு நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை மத்திய அரசும், பாஜக.வும் ஏற்கும் என்பதை ஏற்கெனவே பலமுறை தெளிவுப்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

நக்வி மேலும் கூறும்போது, “கற்கள் எடுத்து செல்வதாலேயே கோயில் கட்ட முயற்சி நடக்கிறது என்று கூறக் கூடாது. நீதிமன்ற தீர்ப்பு வரட்டும். அதுவரை காத்திருப் போம். தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்வோம்” என்றார்.

எனினும் அமைச்சரின் பதிலில் திருப்தி அடையாத எதிர்க்கட்சி யினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கை முன் சென்று கோஷமிட்டனர். ‘மதக் கலவரத்தை தூண்டும் சதித் திட்டத்தை நிறுத்துங்கள்’ என்று காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐஜத எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

மாநிலங்களவை துணை தலைவர் பி.ஜே.குரியன் கூறும் போது, “அமைச்சர் நக்வி அளித்த பதிலில் எந்த குழப்பமும் இல்லை. அரசும் கட்சியும் நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்படும் என்று கூறிவிட்டார். எனவே, உறுப்பினர் கள் அமைதி காக்க வேண்டும். எதற்காக பூஜ்ய நேரத்தை வீணடிக்கிறீர்கள். இருக்கையில் அமருங்கள்” என்று கேட்டு கொண்டார்.

எனினும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனால் முதல் முறை 10 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைத்தார் குரியன். அவை மீண்டும் கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் பிரமோத் திவாரி பேசும்போது, “சட்டப்படி அரசை நடத்துவதாக கூறினால், ஒரு பிரச்சினை நீதிமன்றத்தில் இருந்தால், அதை பற்றி வெளியில் பேச கூடாது” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பேசும்போது, “அயோத்தி பிரச்சினையால் உள்நாட்டு பாதுகாப்பு கவலை அளிக்கிறது. இதுகுறித்து கே.சி.தியாகி அறிக்கை அளிக்க அனுமதிக்க வேண்டும்” என்றார். அதற்கு அவையின் துணைத் தலைவர் குரியன் அனுமதி அளிக்கவில்லை. “நீதிமன்ற தீர்ப்பின்படி நடப்போம் என்று அரசு கூறிவிட்ட பின்னர், இந்தப் பிரச்சினை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை” என்று குரியன் மறுத்துவிட்டார்.

இதற்கிடையில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதவியை ராஜினாமா செய்ய கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் திடீரென கோஷ மிட்டனர். அதனால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

சொன்ன கருத்தை நீக்கினார் சுமித்ரா மகாஜன்

டெல்லியில் ராணுவ விமான விபத்தில் 10 பேர் பலியானதற்கு மக்களவையில் நேற்று முன்தினம் இரங்கல் தெரிவித்த பிறகு, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவை தலைவர் சுமித்ரா மகாஜன் இருக்கையை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட்டனர்.

அப்போது பேசிய சுமித்ரா மகாஜன், “நாட்டு நலன் பற்றி உறுப்பினர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. சுயநலத்துக்காக செயல்படுகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவையில் நேற்று எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறும்போது, “சபாநாயகர் இருக்கையில் இருந்து கொண்டு இப்படி ஒரு கருத்தை வெளியிடுவது கவலை அளிக்கிறது” என்று கூறினார்.

இதுகுறித்து நேற்று காலை சுமித்ரா கூறும்போது, “நான் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனினும் நான் கூறிய கருத்தை அவை குறிப்பில் இருந்து நிச்சயம் நீக்கிவிடுகிறேன். ‘சுயநலத்துக்காக’ என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in