Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

பழைய சைக்கிளில் உணவு விநியோகம் செய்த - ஹைதராபாத் சொமாட்டோ ஊழியருக்கு 'பைக்' பரிசளித்த வாடிக்கையாளர்

பழைய சைக்கிளில் உணவு விநியோகம் செய்து வந்த சொமாட்டோ ஊழியருக்கு, வாடிக்கையாளர் ஒருவர் புதிய 'பைக்கை' பரிசாக வழங்கியுள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ராபின் முகேஷ். தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஹைதராபாத் உணவு, பயணக் குழு என்றமுகநூல் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். கடந்த 14-ம் தேதி இரவு 10 மணிக்கு சொமாட்டோ செயலி மூலம் தேநீருக்கு அவர் பதிவு செய்தார். அடுத்த 15 நிமிடங்களில் அவரது வீட்டுக்கு சுடச்சுட தேநீர் வந்தது.

அன்றைய தினம் கனமழை பெய்தது. ஆனாலும் சொமாட்டோஊழியர் மழையில் நனைந்தபடி பழைய சைக்கிளில் அதிவேகமாக வந்து தேநீர் விநியோகம் செய்ததைப் பார்த்து வியப்படைந்த முகேஷ், அவரின் விவரங்களை கேட்டறிந்தார். அந்த ஊழியரின் பெயர் முகமது அகீல் (21). கரோனா நெருக்கடியால் அவரதுதந்தை அண்மையில் வேலையிழந்தார். இதனால் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் அகீல் சொமாட்டோவில் பகுதி நேர ஊழியராக பணியில் சேர்ந்தார். தினமும் 80 கி.மீ. தொலைவு சைக்கிள் மிதித்து உணவு வகைகளை விநியோகம் செய்து வருகிறார். இதன்மூலம் மாதம் ரூ.8,000கிடைக்கிறது. இந்தப் பணத்தில் குடும்ப செலவுகளை சமாளிப்பதேபெரும் சவாலாக இருக்கும் நிலையில் உணவு விநியோகத்துக்காக அவரால் மோட்டார் சைக்கிள் வாங்க முடியவில்லை.

இதையடுத்து, தனது முகநூல் குழுவில் சொமாட்டோ ஊழியரின் முழுமையான விவரங்களை பகிர்ந்தார். அடுத்த சில மணி நேரத்தில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண் ரூ.30,000 நன்கொடை வழங்கினார். 12 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.73,000 நிதி சேர்ந்தது.

இந்தப் பணத்தில் முகமது அகீலுக்கு புதிய டிவிஎஸ் எக்ஸ்எல் மோட்டார் சைக்கிளை ராபின் முகேஷும் அவரது நண்பர்களும் வாங்கிக் கொடுத்தனர். மீதமிருந்த ரூ.5,000-ஐ ரொக்கமாக அளித்தனர்.

இதுகுறித்து ராபின் முகேஷ் கூறும்போது, ‘‘அறிவுரை கூறுவதைவிட தேவை உள்ளோருக்கு உதவுவது சிறந்தது. இக்கட்டான சூழ்நிலையில் உள்ள ஒரு ஏழை மாணவருக்கு உதவி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக வலைதளங்கள் சமூகத்தை மாற்றும் வல்லமை கொண்டவை. ஒரு பதிவு ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

முகமது அகீல் கூறும்போது, ‘‘எனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கநன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி. புதிய மோட்டார் சைக்கிள் மூலம் இனிமேல் வேகமாக உணவு வகைகளை விநியோகம் செய்வேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x