

அடுத்த மாதம் முதல் நாட்டு மக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதை மத்திய அரசு அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்திலுள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மையத்தில் மிகப்பெரிய அளவிலான கரோனா வைரஸ் தடுப்பூசி பிரச்சாரத்தை நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் மத்தியஅமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கரோனா தொற்று அதிகமாக உள்ள இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் முதல் அதிக அளவில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தேவைப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும். நாட்டு மக்கள் பயப்படாமல், கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வரவேண்டும். இதன்மூலமே நாம் கரோனாவை வெல்ல முடியும்.
உலக அளவில் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு விரைவில் எட்டும். வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்படும்.
அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசதடுப்பூசி செலுத்தும் திட்டம் மிகப்பெரிய முடிவாகும். சர்வதேச யோகா தினத்தில் இதை தொடங்கியுள்ளோம். இதன்மூலம் நாட்டு மக்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கரோனா வைரஸையும் நாம் எதிர்க்க முடியும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.