

அயோத்தியில் கட்டப்பட்டு வரும்ராமர் கோயிலுக்காக வாங்கப்பட்ட மற்றொரு நிலத்தின் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. ரூ.30 லட்சத்திற்கு மடத்திலிருந்து வாங்கப்பட்ட நிலத்தை ரூ.2.5 கோடிக்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வாங்கியுள்ளது.
அயோத்தியில் ராமஜென்ம பூமிக்கு வெகு அருகில் அமைந்துள்ளது தசரதா மஹால் கோயில் மடம். இம்மடத்தின் 890 சதுர மீட்டர் அளவிலான நிலம் ராமர் கோயிலுக்காக கடந்த பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை நேரடியாக ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு இன்றி அதன் பெயரில் அயோத்தியின் பாஜக மேயரான ரிஷிகேஷ் உபாத்யாவின் மருமகனான தீப் நாராயண் வாங்கியுள்ளார். இவருக்கு தசரத மஹால் மடத்தின் தலைவரான மஹந்த் தேவேந்திர பிரசாத் ஆச்சார்யா ரூ.30 லட்சத்திற்கு நிலத்தை விற்பனை செய்துள்ளார்.
இதில், பதிவு பத்திரத்தில் ரூ.20 லட்சம் எனக் குறிப்பிட்டு மீதத்தொகை ரூ.10 லட்சம் ரொக்கமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம், ராமர் கோயிலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதன் பிறகு இந்த நிலம், ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு தீப் நாராயண் சார்பில் ரூ.2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த நிலபேரத்திலும் ஊழல் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து தசரதா மஹால் மடத்தின் தலைவரான மஹந்த் தேவேந்திர பிரசாத் கூறும்போது, ‘நாங்கள் விற்பனை செய்தது பல ஆண்டுகளுக்கு முன் அரசிடம்இருந்து பெறப்பட்ட நஜூல் நிலம். எனவே, கிடைத்த விலையே லாபமானது எனவும் ராமர் கோயிலுக்காக என்பதாலும் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டோம். ஆனால், அதை ரூ.2.5 கோடிக்கு அவரது மருமகனிடமிருந்து அறக்கட்டளையினர் வாங்கியது குறித்து எங்களுக்கு தெரியாது’ எனத் தெரிவித்தார்
கடந்த மார்ச் 18-ல் ராமர் கோயிலுக்காக அயோத்தியில் 1,208 ஹெக்டேர் நிலம் வாங்கப்பட்டது. சுல்தான் அன்சாரி மற்றும் இதர நபர்கள் ரூ.2 கோடிக்கு வாங்கிய இந்த நிலத்தை அடுத்த சில நிமிடங்களில் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு ரூ.18.5கோடிக்கு விற்பனை செய்ததாகப்புகார் எழுந்தது. இந்த புகாரைஆதாரங்களுடன் அறக்கட்டளையினர் மறுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.
நஜுல் நிலம் வரலாறு
ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்பட்டிருந்த போது 1857-ம்ஆண்டு மீரட்டில் சிப்பாய் கலகம் ஏற்பட்டது. இதில், கடைசி முகலாய மன்னர் பஹதூர்ஷா ஜபர் தலைமையில் ஜான்சி ராணி உள்ளிட்ட வட பகுதியை ஆண்ட சிறிய மன்னர்களும் போரிட்டனர். இதில் ஏற்பட்ட தோல்வியால் அனைவரும் தங்கள் இடங்களை விட்டு தலைமறைவாகினர். இதில் அவர்களால் கைவிடப்பட்ட நிலங்களை 1861-ல் ‘நஜுல்’ என அறிவித்த ஆங்கிலேய அரசு அவற்றைநிர்வகிக்க ஒரு அரசு துறையையும்தனியாக அமைத்தது.
இத்துறையின் சார்பில் நஜுல் நிலங்கள் கோயில், மசூதி உள்ளிட்டவற்றுக்கு 99 வருடங்கள் வரை மலிவான தொகையில் குத்தகைக்கு விடப்பட்டன. இதில் பல நிலங்கள் சிக்கலுக்குள்ளாகி, அவைகள் மீது பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த நஜுல் துறை அதே பெயரில் இன்றும் உபியில் இயங்குகிறது. இதன் அலுவலகம் லக்னோ, ஆக்ரா, அலகாபாத் உள்ளிட்ட உபியின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களை விற்கவோ, விலைக்கு வாங்கவோ எவராலும் முடியாது. எனினும், குத்தகைக்கு எடுத்தவர் இறப்பிற்கு பின் அவர்களது வாரிசுகள் அதில் தொடர முடியும்.
எனவே, அயோத்தியின் புகாரில் சிக்கியுள்ளது நஜூல் நிலம் என்பதால் அதை விற்பனை செய்யவோ, விலைக்கு வாங்கவோ முடியாது. இதை அரசின் நஜூல்துறை தான் வேறு எவருக்கும் மாற்றித்தர முடியும். இப்புகாருக்கு பின் அதன் பதிவும் கேள்விக்குறியாதி விட்டது.