நாடாளுமன்ற துளிகள்: சர்வதேச தரவரிசையில் இடம்பெறாதது ஏன்?

நாடாளுமன்ற துளிகள்: சர்வதேச தரவரிசையில் இடம்பெறாதது ஏன்?
Updated on
1 min read

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அளித்த பதில் வருமாறு:

கங்கை தூய்மையில் கார்ப்பரேட் நிறுவனங்கள்

நீர்வளத் துறை இணை அமைச்சர் சன்வர்லால் ஜாட்:

கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டத்துக்காக தனியார் அமைப்புகளுடன் எவ்வித ஒப்பந்தமும் செய்துகொள்ளப் படவில்லை. எனினும், கார்ப்பரேட் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) திட்டங்களின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

அருங்காட்சியகங்களுக்கு புது பாதுகாப்பு

கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா:

ஒருங்கிணைந்த பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதியாக அருங்காட்சியகங்களில் உள்ள பொருட்களையும் நினைவுச் சின்னங்களையும் பாதுகாக்க சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு வழங்குமாறு அரசுக்கு கலாச்சாரத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

24 நினைவுச் சின்னங்களை காணவில்லை

கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா:

தொல்லியல் ஆய்வுத் துறையின் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் 24 நினைவுச் சின்னங்களைக் காணவில்லை அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 11, ஹரியாணா, டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தானின் தலா 2, அசாம், அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கத்தின் தலா 1 நினைவுச் சின்னங்களைக் காணவில்லை.

சர்வதேச தரவரிசையில் இடம்பெறாதது ஏன்?

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி:

உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களைக் கண்டறிவதற்கான ‘கியூஎஸ்’ மற்றும் ‘டிஎச்இ’ சர்வதேச ஆய்வில் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற போதிலும், அவற்றுக்கு தரவரிசைப் பட்டியலில் உரிய இடம் கிடைப்பதில்லை. அந்த அமைப்புகள் தர வரிசைப்படுத்துவதற்கு பயன்படுத்தும் சில அடிப்படைக் கூறுகளே இதற்குக் காரணம். இந்த அடிப்படைக் கூறுகள் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் கருத்தைப் பொருத்து அமைகிறது. எனவே, இந்த விஷயத்தில் கல்வி நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

13 ஆயிரம் மெகாவாட் பசுமை மின் உற்பத்தி

மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்:

12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) கூடுதலாக 1,18,537 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், வழக்கமான மின் உற்பத்தி இலக்கான 88,537-ல் கடந்த 7-ம் தேதி வரையில் 70,480 மெகா வாட் மின் உற்பத்தி இலக்கு எட்டப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி இலக்கான 30 ஆயிரம் மெகாவாட்டில் அக்டோபர் 31 வரையில் 13,204 மெகா வாட் இலக்கு எட்டப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in