Last Updated : 21 Jun, 2021 08:18 PM

 

Published : 21 Jun 2021 08:18 PM
Last Updated : 21 Jun 2021 08:18 PM

தடுப்பூசிக்கான தயக்கம் கரோனாவுக்கான அழைப்பு: மத்திய அமைச்சர் நக்வி கருத்து

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குக் காட்டும் தயக்கம் கரோனா வைரஸுக்கு நாம் விடுக்கும் அழைப்பு என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராமப் பகுதியில் கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

''நாட்டின் சில பகுதிகளில் சில சொந்த நலன்களுக்கான கரோனா தடுப்பூசிகள் குறித்து வதந்திகளையும் அச்சத்தையும் பரப்பி வருகின்றனர். அத்தகையோர் மக்களின் நலனுக்கும், ஆரோக்கியத்துக்கும் எதிரிகள்.

நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பின் பலனாக இந்தியாவில் 2 கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை மற்றும் கரோனாவை எதிர்த்துப் போராடுவதில் சக்திவாய்ந்த ஆயுதங்கள் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

தகுதிவாய்ந்த ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதுடன் நாட்டை பெருந்தொற்று இல்லாத இந்தியாவாக மாற்ற வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குக் காட்டும் தயக்கம் கரோனா வைரஸுக்கு நாம் விடுக்கும் அழைப்பு. சமயத் தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இஸ்லாமியத் தலைவர்கள், சீக்கியத் தலைவர்கள், கிறிஸ்தவ, புத்த, சமணத் தலைவர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்துள்ளனர். அதேபோலத் திரைப்பட, சின்னத்திரை நடிகர்களும் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி முகாமை மோடி அரசு நடத்தி வருகிறது. இதன்மூலம் நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி அடிப்படையில் மிகச்சிறந்த வளங்களும் வசதிகளும் உள்ள நாடுகளை விட இந்தியா மிகவும் முன்னிலையில் உள்ளது. அரசும் சமூகமும் ஒன்றிணைந்து நாட்டை விட்டே கரோனா வைரஸை ஒழிக்கப் பாடுபட வேண்டும்''.

இவ்வாறு மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x