

‘டெல்டா பிளஸ்' கரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரிட்டனிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கரோனா 2-வது அலையின் போது டெல்டா வகை வைரஸ் வேக மாக பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாடு மாதக் கணக்கில் ஊரடங்கை நீட்டித்து கொண்டே செல்கிறது. பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு ஏதாவது ஒரு புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டால் உடனடியாக ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.
59 சதவீதம் பேருக்கு 2 தவணை சமீபத்திய புள்ளி விவரத்தின் படி பிரிட்டனில் 18 வயதுக்கு மேற் பட்டோரில் 81 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 59 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கையாக பிரிட்டன் முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக அந்த நாட்டில் டெல்டா வகை வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் பிரிட்டனிடம் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களையும் புதிய வைரஸ் எளிதில் தொற்றக்கூடும்.
ஒருவேளை கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டால் அடுத்த 3 அல்லது 4 மாதங்
களில் 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்பு களை மீண்டும் சந்திக்க நேரிடும்.
இந்த இக்கட்டான நேரத்தில் கரோனா வைரஸ் மரபணு பரி சோதனைகளை அதிகரிக்க வேண்டும். புதிய வகை வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் எந்தஅளவுக்கு பலன் அளிக்கிறது. மோனோகுளோனல் ஆன்டிபாடிசிகிச்சை பலன் அளிக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆய்வக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் இல்லை
டெல்டா பிளஸ் வைரஸ் கடந்த மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. இப்போதைக்கு இந்த வைரஸால் மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை
என்றும் மத்திய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகளும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். எனினும் டெல்டா
பிளஸ் வைரஸ் குறித்து இப்போதே மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் அறிவுறுத்திஉள்ளனர். - பிடிஐ