

மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை தாக்குவோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள் துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலமற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைபணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது சில இடங்களில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. சில நேரங்களில் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களால் மற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான அச்ச உணர்வு ஏற்படும். இதனால் சுகாதாரப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பெருந்தொற்று நோய்கள் (திருத்த) சட்டம் 2020-ன் கீழும் வழக்கு பதிவு செய்யலாம். இந்த சட்டத்தின்படி, குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். அதேநேரம், சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறை மிகவும் மோசமானதாக இருந்தால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ