Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM

மாநிலங்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி: மத்திய அரசின் புதிய நடைமுறை இன்று முதல் அமல்

மாநிலங்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசிகளை வழங்கும் புதிய நடைமுறைஇன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

கடந்த ஜனவரி 16 முதல் ஏப்ரல் 30 வரைகரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து 100 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்கியது. இதன்பிறகு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்த தனியார் மருத்துவமனைகளும் திட்டத்தில் இணைக்கப்பட்டன.

கடந்த மே 1-ம் தேதி கரோனா தடுப்பூசிதிட்ட வழிகாட்டு நெறிகள் திருத்தப்பட்டன. இதன்படி, இந்தியாவில் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும்,25 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும், 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கொள்முதல் செய்யவதற்கான நிதி திரட்டுவது, தடுப்பூசிகளை கொண்டு செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் எழுவதாக மத்திய அரசிடம் மாநில அரசுகள் முறையிட்டன. இதையடுத்து, கடந்த 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு உரையாற்றியபோது, ‘‘உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்’’ என்று அறிவித்தார்.

அதன்படி, மாநிலங்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசிகளை வழங்கும் புதிய நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள், 18 வயதுக்குமேற்பட்டவர்கள் என்ற முன்னுரிமை அடிப்படையில் மாநில அரசுகள் தடுப்பூசிகளை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தொகை, கரோனா பாதிப்பு, தடுப்பூசி திட்டத்தின் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிகளை வீணாக்கினால் ஒதுக்கீடு குறைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், ‘இணையதள முன்பதிவு கட்டாயமில்லை. கரோனா தடுப்பூசி மையத்துக்கு நேரில் சென்று, அங்கேயே பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறையும் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி ரூ.1,145 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேவைக் கட்டணமாக ரூ.150 மட்டும் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x