

இன்று இந்துக்களுக்கான நிர்ஜலா ஏகாதேசியை முன்னிட்டு நாடு முழுவதிலும் கங்கைக்கான தசரா கொண்டாட்டம் நடைபெறுகிறது.
இதற்காக ஹரித்துவாரில் புனித குளியலுக்கு மருத்துவ சான்றிதழுடன் கரோனா தொற்று இல்லை என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
உத்தராகண்டின் ஹரித்துவாரில் கடந்த ஏப்ரலில் கும்பமேளா தொடங்கி நடைபெற்றது. இதில் கரோனா மீதானப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது.
முதலாவது புனித குளியலை ஏப்ரல் 14 இல் சுமார் 43 லட்சம் பேர் எடுத்தனர். இதனால், வட மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்ததாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில், இன்று கங்கைக்கான தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் முக்கியமான ஹரித்துவாரின் கங்கையிலும் பல லட்சம் பேர் புனித குளியல் நடத்துவது வழக்கம்.
அப்போது கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க பாஜக ஆளும் உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கங்கையில் குளிக்க வருபவர்கள் கரோனாவிற்கான ஆர்டிபிசிஆர் மருத்துவப் பரிசோதனைக்கான சான்றிதழ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் கரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே குளியலுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஹரித்துவாரின் ஹர் கி பவுரி எனும் பகுதியிலுள்ள கங்கை கரையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், கங்கைக்கான தசராவிற்கானப் புனிதக் குளியலை தங்கள் வீடுகளிலேயே முடித்துக் கொள்ளுமாறும், அரசு தரப்பில் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதையும் ஏற்று பல லட்சம் பேர் கங்கை கரைக்கு வருவதை தவிர்த்துள்ளனர்.
கங்கையில் குளிக்க வருபவர்களை ஹர் கீ பவுரி எல்லைகளில் தடுத்து நிறுத்தி மருத்துவச் சான்றிதழ்கள் சோதிக்கப்படுகின்றனர். அதன் பிறகு அனுமதிக்கப்படுபவர்கள் குளிக்கும் போதும் சமூக இடைவெளி உள்ளிட்டக் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.